கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் சங்கம் வலியுறுத்தல்


கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 May 2017 11:00 PM (Updated: 7 May 2017 8:24 PM)
t-max-icont-min-icon

கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று கட்டிட தொழிலாளர் மத்திய சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு கட்டிட தொழிலாளர் மத்திய சங்கம், விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, அமைப்புசாரா தொழிலாளர் மத்திய சங்கம், பொன்குமார் இளைஞரணி சார்பில் கொடியேற்று விழா தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை கல்லுக்குளத்தில் உள்ள மாவட்ட அலுவலகம் மற்றும் சண்முகநாதன்நகரில் நேற்று நடந்தது. இதில் வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன், மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.

பின்னர் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். மகளிரணி மாவட்ட செயலாளர் செல்வி, அமைப்புசாரா மாவட்ட செயலாளர் ஜெசிந்தாவசந்தராணி, மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் வரவேற்றார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வறட்சியால் பயிர்கள் கருகி விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலையில் மத்திய அரசு ஹைட்ரோகார்பன், மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து இருப்பது விவசாயிகளை மரணகுழியில் தள்ளும் செயலாகும். எனவே இதற்கான அனுமதியை ரத்து செய்து விட்டு, விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நலவாரியங்களுக்கு நிதி ஒதுக்காததால் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஓய்வூதியம் வேண்டி மனு கொடுத்தும் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே நலவாரியங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் பணி நேரத்தை தவிர்த்து எங்கு எப்படி இறந்தாலும் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். அதே போல அமைப்புசாரா தொழிலாளர்களும் எப்படி இறந்தாலும் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். நலவாரியங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கட்டுமான பொருட்களான செங்கல், சிமெண்டு, மணல், ஜல்லி, மரம், கம்பி போன்ற பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story