முற்றுகை போராட்டம்: திறக்க இருந்த டாஸ்மாக் கடையை மூட வைத்த பெண்கள்


முற்றுகை போராட்டம்: திறக்க இருந்த டாஸ்மாக் கடையை மூட வைத்த பெண்கள்
x
தினத்தந்தி 7 May 2017 4:15 AM IST (Updated: 7 May 2017 3:01 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் குடியிருப்புகள், பள்ளி, மருத்துவமனை அருகே புதிதாக அமைக்கப்பட இருந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம்,

நெடுஞ்சாலைகளின் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயங்கி வந்த 36 கடைகளில் 16 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அடைக்கப்பட்ட கடைகளுக்கு பதிலாக மாற்று இடம் தேர்வு செய்யும் பணிகள் வருவாய்த் துறை மூலம் நடைபெற்று வருகின்றன.

ஆனால் புதிதாக கடை அமைக்க பல இடங்களில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதேபோல நகராட்சிக்கு உட்பட்ட டி.பி. மில்ஸ் சாலையோரம் புதிதாக டாஸ்மாக் கடை நேற்று திறப்பதாக இருந்தது. முன்பு கிளப் இயங்கி வந்த இடத்தை வாடகைக்கு அமர்த்தி கடையினை திறக்க அதிகாரிகள் தயாராகி வந்தனர். அந்த பகுதியை சுற்றிலும் குடியிருப்புகள், குழந்தைகள் மருத்துவமனை, பள்ளிக்கூடம், கோவில், விசைத்தறி கூடம் உள்ளிட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அருகே ரெயில் நிலையமும் உள்ளது.

இந்த இடத்தில் டாஸ்மாக் கடைஅமைத்தால், விசைத்தறி மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்கள், கோவிலுக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு வரும் இளம் தாய்மார்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்படும். எனவே இங்கு கடை திறக்க கூடாது என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முற்றுகை

நேற்று காலை கடையை திறக்க ஆயத்தமாகி வந்த நிலையில் இடம் மாற்றக் கோரி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் திரண்டு வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசாரும், அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அங்கு கடை திறக்கவே கூடாது எனவும் வேறு இடத்துக்கு மாற்றும் வரை போராட்டத்தை கை விடமாட்டோம் என்றும் பெண்கள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். சுமார் அரை மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், கடை நிரந்தரமாக மூடப்படும் என்ற அதிகாரிகளின் உறுதிமொழியை அடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே தொடர்ந்து பெண்கள் போராட்டம் நடத்தி வருவது அதிகாரிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.

Next Story