ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை


ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 28 March 2017 2:15 AM IST (Updated: 27 March 2017 8:19 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

முற்றுகை

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று காலை ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். அவர்கள் திடீரென தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்துக்கு ஓட்டப்பிடாரம் ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவர் மாசானசாமி தலைமை தாங்கினார். ஊர் தலைவர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார்.

தெற்கு ஆவாரங்காடு பகுதிக்கு மேற்கே தனியாருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீரை உறிஞ்சி லாரிகள் மூலம் வெளியே விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஆவாரங்காடு கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தெற்கு ஆவாரங்காடு கிராமத்தை சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் சேர்ந்து அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். மேலும் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் தாசில்தார் முருகானந்தம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், அனுமதி பெறாமல் குடிநீர் உறிஞ்சப்பட்ட ஆழ்துளை கிணறுக்கு சீல் வைக்கப்படும். சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தெற்கு ஆவாரங்காடு கிராமத்திற்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியில்லாமல் நிலத்தடி நீர் உறிஞ்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.


Next Story