ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் திருவெள்ளறை பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்


ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் திருவெள்ளறை பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்
x
தினத்தந்தி 19 March 2017 4:00 AM IST (Updated: 19 March 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் திருவெள்ளறை பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்.

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளன்று பெருமாள் பங்கஜவல்லி தாயாருடன் திருச்சிவிகையில் எழுந்தருளி வீதி உலா வந்தார். 2-ம் நாளான நேற்று முன்தினம் காலை பெருமாள் கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும் வீதி உலா வந்தார்.

3-ம் நாளான நேற்று கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி காண கோவிலில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பெருமாளும், பங்கஜவல்லி தாயாரும் தனித்தனி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி கொள்ளிடம் ஆற்றுக்கு நேற்று காலை 9 மணிக்கு வந்தடைந்தனர்.

தீர்த்தவாரி

பின்னர் அங்கு பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார். இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் அலங் கரிக்கப்பட்ட பந்தலில் பெருமாள், பங்கஜவல்லி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் நள்ளிரவில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திருவெள்ளறை சென்றடை கிறார்.

திருவிழாவின் 4-ம் நாளான இன்று இரவு பெருமாள் கருடவாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 5-ம் நாள் விழாவான நாளை (திங்கட்கிழமை) காலை ஹம்சவாகனத்திலும், மாலை சேஷவாகனத்திலும், 6-ம் நாளன்று காலை சிம்ம வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். 7-ம் நாளன்று நெல்லளவு கண்டருளி பின்னர் பூந்தேரில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

தேரோட்டம்

8-ம் நாள் காலை வண்டலூர் சப்பரத்தில் வீதி உலாவும், மாலை குதிரை வாகனத்தில் வையாளியும் கண்டருளுகிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 24-ந்தேதி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர். 

Next Story