உத்தங்குடி பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்
மதுரையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மதுரை,
மதுரையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க மாநகராட்சி சார்பில் 250 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆழ்துளை கிணறுகள் மதுரை நகரை ஒட்டியுள்ள கண்மாய் பகுதியில் அமைக்கப்படுகிறது. அதன்படி உத்தங்குடி கண்மாய் அருகில் ஏற்கனவே 14 ஆழ்துளை கிணறுகளை மாநகராட்சி அமைத்துள்ளது. இன்னும் கூடுதலாக அங்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
இதனையறிந்த அந்த பகுதி மக்கள் அங்குள்ள மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் ஏற்கனவே நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போய் உள்ளது. தற்போது மாநகராட்சி அமைக்க உள்ள ஆழ்துளை கிணறுகளால் நிலத்தடி நீர்மட்டம் படுபாதாளத்துக்கு போகும். எங்களுக்கு நீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கக்கூடாது என்றனர். ஏற்கனவே மாடக்குளம், ஊமச்சிக்குளம் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மாநகராட்சி அங்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை கைவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.