பொள்ளாச்சி– போத்தனூர் இடையே அலக ரெயில் பாதையில் இறுதி கட்ட பணி மும்முரம் அடுத்த மாதம் ரெயில் இயக்க வாய்ப்பு
பொள்ளாச்சி– போத்தனூர் இடையே அலக ரெயில் பாதையில் இறுதி கட்ட பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கிணத்துக்கடவு,
அகல ரெயில் பாதை
பொள்ளாச்சி– போத்தனூர் இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்ற கடந்த 2009–ம் ஆண்டு இறுதியில் தண்டவாளங்கள் அகற்றப்பட்டு பணி தொடங்கியது. இதையடுத்து பொள்ளாச்சி முதல் போத்தனூர் வரை உள்ள 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடந்தது.
ஆனால் கிணத்துக்கடவு பகுதியில் பல இடங்களில் ரெயில் தண்டவாளம் அமைக்க கூடுதல் நிலம் தேவைப்பட்டதால் மீண்டும் நிலம் அளவீடு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் தேவையான நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட பின்னர் ரெயில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி பொள்ளாச்சியில் இருந்து தொடங்கியது.
35 அடி உயரத்தில்இதில் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வரும் வழியில் ரெயில் தண்டவாளங்கள் குறிப்பிட்ட தூரம் பள்ளத்திலும் தாமரைக்குளத்தை கடந்து கிணத்துக்கடவு ரெயில் நிலையம் வரும் வழியில் சுமார் 35 அடி உயரத்திலும், கிணத்துக்கடவில் இருந்து செட்டிபாளையம் செல்லும் வழியில் ரெயில் தண்டவாளங்கள் 60 அடி பள்ளத்திலும் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பணிகளில் மிகவும் தொய்வு அடைந்தது.
மேலும் கிணத்துக்கடவு ரெயில் நிலையம் வரும் வழியில் ஏராளமான மண் கொட்டப்பட்டு மேடாக மாற்றப்பட்டு பின்னர் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டன. அதன்பிறகு ரெயில்வே துறையினர் டிராலி மூலம் பாதையை ஆய்வு செய்தனர். முதல் முறையாக 8 ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளச்சியில் இருந்து கிணத்துக்கடவு ரெயில் நிலையம் வரை அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது.
பாறைகள் அகற்றும் பணிகிணத்துக்கடவில் இருந்து போத்தனூர் செல்லும் வழியில் அரசம்பாளையம் பகுதியில் 60 அடி பள்ளத்தில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட போது கடுமையான பாறைகள் இருந்தன. அவற்றை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.
போத்தனூரில் இருந்து செட்டிபாளையம் வழியாக கிணத்துக்கடவு வரை மொத்தம் 20 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்டவாளம் அமைக்க வேண்டி இருந்தது. இதற்காக 4 அடி முதல் 60 அடி வரையிலான பள்ளத்தில் 5 கிலோ மீட்டர் தூரம் தண்டவாளம் அமைக்கப்பட்டது.
மேலும், ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டும் அதிகமான பாறைகள் அமைந்து உள்ளதால் பணிகள் முடியவில்லை. தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது வருகிறது. தற்போது ரெயில்வே நிர்வாகம் அடுத்த மாதம் (ஏப்ரல்) இந்த வழித்தடத்தில் ரெயில் விட முடிவு செய்துள்ளது. இதனால் மீதம் உள்ள ஒரு கிலோ மீட்டர் தூரத்திலும் தண்டவாளங்கள் அமைப்பதற்காக சிமெண்ட் சிலிப்பர் அமைக்கும் பணியில் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–
பாதுகாப்பான பயணம்பொள்ளாச்சி– போத்தனூர் இடையே ரெயில் இயக்கம் நிறுத்தப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. இதனால் இந்த ரெயிலில் பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், கூலித்தொழிலாளர்கள் பொள்ளாச்சி இருந்து பஸ்சில் செல்வதால் சிரமம் ஏற்படுகிறது. மேலும் பஸ்சில் கோவைக்கு செல்லும்போது தனியார் பஸ்கள் ஒன்றையொன்று போட்டிபோட்டு முந்தி செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
போத்தனூர்–பொள்ளாச்சி வழித்தடத்தில் ரெயில் சேவை விரைவில் செயல்பாட்டுக்கு வந்தால் எங்களுக்கு செலவும் குறையும். எனவே பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.