அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீது பாலன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீது முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம் எம்.என்.ஆர். பாலன் எம்.எல்.ஏ. நேரில் பரபரப்பு புகார் தெரிவித்தார்.
புதுச்சேரி,
‘என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை; இஷ்டம்போல் செயல்படுகிறார்’ என்றுராஜினாமா?
புதுவை அரசின் சுற்றுலாத்துறை அமைச்சராக மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளார். சுற்றுலா வளர்ச்சி துறையையும் இவர் கவனித்து வருகிறார். அதேநேரத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவராக எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ. இருந்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே பனிப்போர் இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ. தனது சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல் பரவியது.
இதை உறுதிபடுத்தவது போல் அவர் தனது அரசு காரை புறக்கணித்து விட்டு தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சட்டசபைக்கு வந்தார். அங்கு முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீது பல்வேறு புகார்களை தெரிவித்தார்.
இதுதொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், ‘ஒரு குடும்பம் என்றால் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். எங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்துக்கொள்வோம்’ என்றார்.
முதல்–அமைச்சர் நாராயணசாமியுடனான சந்திப்பு முடிந்தபின் எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–
தேவையில்லாத தலையீடுநான் சில குறைபாடுகளை முதல்–அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். மற்றவர்கள் நினைப்பதுபோல் நான் பதவியை ராஜினாமா செய்யவில்லை. சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் நிறைய தவறுகள் நடந்தன. அதைத்தொடர்ந்து மேலாண் இயக்குனர் மாற்றப்பட்டார்.
இங்கு நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரணைகள் நடந்து வருகின்றன. சுற்றுலா வளர்ச்சிக் கழக செயல்பாடுகளில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தேவையில்லாமல் தலையிடுகிறார். கழக தலைவரான எனக்கே தெரியாமல் 2 படகுகளை வாங்கி உள்ளனர். மேலும் ரூ.3 கோடி பணிகளுக்கான அடிக்கல்லும் நாட்டினர். இப்போதுகூட சில பணிகளுக்காக பொருட்களை இறக்குகின்றனர். அங்க என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை.
பயன் இல்லைஅப்படி இருக்கும்போது சம்பந்தப்பட்ட துறை கழகத்தின் தலைவராக மட்டும் இருப்பதில் எனக்கு என்ன பயன் இருந்து விடப் போகிறது? அமைச்சர் தன் இஷ்டத்துக்கு செயல்படுகிறார். கடந்த காலங்களில் இருந்த முதல்–அமைச்சர்தான் இப்படி செய்வார் என்றார்கள். இப்போது இந்த அமைச்சர் அவரைவிட மோசமாக உள்ளார்.
நான் இந்த ஆட்சிக்கோ, கட்சிக்கோ எதிராக செயல்படமாட்டேன். நான் எனது குறைகளை முதல்–அமைச்சரிடம் தெரிவித்துவிட்டேன். அவர் அதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பார். இல்லையென்றாலும் நான் எம்.எல்.ஏ.வாக பணியை தொடர்வேன். ஏனெனில் கழகத்தில் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் கழக தலைவருக்கும், மேலாண் இயக்குனருக்கும்தான் நோட்டீசு வரும்.
இவ்வாறு எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ. கூறினார்.