நாகை மீனவர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தம் மீன் வர்த்தகம் பாதிப்பு


நாகை மீனவர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தம் மீன் வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 12 March 2017 4:00 AM IST (Updated: 12 March 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படை யினரை கண்டித்து நாகை மீனவர்கள் நேற்று 5-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மீன் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்,

கடந்த 3-ந் தேதி நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். அதைதொடர்ந்து கடந்த 6-ந் தேதி ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் பிரிட்ஜோ (வயது 21) என்பவர் உயிரிழந்தார். மேலும், 3 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, சிறைபிடிக்கப்படுவது குறித்து நாகை மீன்பிடி துறைமுக அலுவலக கட்டிடத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய 6 மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மீன் வர்த்தகம் பாதிப்பு

கூட்டத்தில் இலங்கை கடற்படையினரை கண்டித்து ராமேசுவரத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு 4 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது. இலங்கை அரசை கண்டித்து நாளை (13-ந் தேதி) முதல் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் அந்தந்த மாவட்டத்தில் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பது என்றும், 6 மாவட்ட மீனவ கிராமங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று நாகை மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து நேற்று 5-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களின் வேலை நிறுத்தத்தால் நாகை மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசை படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் நாகையில் நாள் தோறும் நடைபெறும் சுமார் ரூ.5 கோடிக்கும் மேல் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மீன்பிடி சார்ந்த தொழில்களான டீசல் ஏற்றும் தொழில், ஐஸ் தயாரிக்கும் தொழில் உள்ளிட்ட தொழில்களும் பாதிக்கப் பட்டுள்ளன. 

Next Story