திருச்சியில் பயங்கரம் ஓட்டல் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை போலீசார் விசாரணை
திருச்சியில் ஓட்டல் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி,
ஓட்டல் தொழிலாளி
திருச்சி பாலக்கரை முதலியார்சத்திரத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மகன் நாகராஜ்(வயது 27). இவருக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருடைய மனைவி பானுமதி. இவர்களுக்கு 1½ வயதில் குழந்தை உள்ளது. நாகராஜ் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு நாகராஜ் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அங்குள்ள ஆலம்தெரு பகுதியில் ஒரு அரிசிஆலை அருகே நாகராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்தை சுற்றி 3 இடங்களில் கத்தி குத்து காயங்கள் இருந்தன.
கத்தியால் குத்தி கொலைஇதனைகண்ட அந்த பகுதியினர் பாலக்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். சம்பவம் நடந்த இடத்துக்கு மோப்பநாய் ஸ்பார்க் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிதுதூரம் ஓடி காஜாப்பேட்டை வழியாக சென்று மீண்டும் கொலை நடந்த இடத்தின் அருகே ஒரு வீட்டின் முன்பு படுத்து கொண்டது. சம்பவ இடத்துக்கு திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர் மயில்வாகனன் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் பாலக்கரை போலீசார் நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணைநேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நாகராஜை யாரேனும் மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலை சம்பவம் குறித்து நாகராஜுடன் ஓட்டலில் வேலை பார்த்து வரும் அவரது நண்பர்கள் மற்றும் அவரது வீட்டின் அருகே வசித்து வருபவர்கள், உறவினர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சியில் ஓட்டல் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.