அரக்கோணம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

அரக்கோணம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா நடந்தது.
அரக்கோணம்,
அரக்கோணம், பழனிப்பேட்டையில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அரக்கோணம், உப்புகுளம் பகுதியில் இருந்து சாமிக்கு பூங்கரகம் ஜோடித்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு 12 மணியளவில் இருளகப்பரை ஏந்தி மயானம் நோக்கி சென்று அம்மன் உருவம் பதித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
நேற்று மயான கொள்ளை விழாவை முன்னிட்டு விரதமிருந்த பக்தர்கள் காளி, காட்டேரி, சிவன், பார்வதி, முருகர் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பக்தர்கள் வாயில் அலகு குத்தியும், ஆட்டோ, மினிவேன் போன்ற வாகனங்களை முதுகில் அலகு குத்தியவாறு இழுத்து சென்றனர். பக்தர்கள் உடல் முழுவதும் எலுமிச்சை பழத்தை குத்தியும், முதுகில் அலகுகுத்தி அந்தரத்தில் தொங்கியவாறு தூக்கு காவடி எடுத்தனர்.
பெண் பக்தர்கள் கையில் தீச்சட்டி ஏந்தி பக்தி பரவத்துடன் சாமி அருள் வந்து ஆடினர். பெரியவர்கள் மட்டுமில்லாமல் சிறுவர்கள், குழந்தைகளும் சாமி வேடமணிந்து சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
ஊர்வலம்பிற்பகல் 2–30 மணியளவில் சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு கோவிலில் இருந்து சாமி ஊர்வலம் மோசூர் சாலையில் உள்ள மயானத்துக்கு சென்றது. ஊர்வலத்தின்போது அங்காளபரமேஸ்வரி அம்மன் சாமி மீது நவதானியங்கள், காய்கறிகள், உப்பு, சுண்டல், கொழுகட்டை, எலுமிச்சை பழம், சில்லறை காசுகள் உள்ளிட்ட பொருட்களை சூறை விட்டு தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள்.
பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த கோவிலில் இருந்து மயானம் வரை போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பாதுகாப்பு பணியில் உதவி போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், அண்ணாதுரை, ரமேஷ், சப்–இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி, போக்குவரத்து போலீசார், ஊர் காவல் படையினர் இருந்தனர். ஊர்வலம் சென்ற வழிப்பாதைகளில் தண்ணீர் பந்தல், அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் அரக்கோணம், காஞ்சீபுரம், திருவள்ளூர், திருத்தணி மற்றும் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.