வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் தேரோடடம் நாளை நடக்கிறது
வெள்ளகோவில் வீரக்குமார சாமி கோவில் சிவராத்திரி தேர்த்திருவிழா நாளை (சனிக்கிழமை)
வெள்ளகோவில்,
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் பிரசித்தி பெற்ற வீரக்குமார சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் சிவராத்திரி தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி 134–வது ஆண்டு மாசி மகா சிவராத்திரி தேர்த்திருவிழா கடந்த 2–ந் தேதி காலை 9 மணிக்கு தேர் முகூர்த்தம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
கடந்த 16–ந் தேதி தேருக்கு கலசம் வைத்து கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு பள்ளய பூஜை நடக்கிறது.
தேரோட்டம்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை மாலை 4 மணிக்கு சாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மாலை 6 மணிக்கு தேர்நிலை பெயர்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 26–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.45 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 27–ந் தேதி மாலை 5 மணிக்கு தேர்நிலை வந்து சேருகிறது. பின்னர் சாமி தேர்க்கால்பவனி, தேவஸ்தான மண்டப கட்டளை நடைபெறுகிறது. தேர்நிலை பெயர்தலுக்கு முன்னதாக கோவில் குலத்தவர்கள் பூஜை செய்து, குலத்தவர்கள் தேங்காய் உடைப்பு நிகழ்ச்சி முடிந்ததும் தேர்நிலை பெயர்த்து வைக்கப்படும்.
தேரோட்ட விழாவில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் செல்வகுமார சின்னையன், காங்கேயம் தனியரசு எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும், மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி, போலீஸ் சூப்பிரண்டு உமா, கோவை அறநிலையத்துறை இணை ஆணையர் இளம்பரிதி, திருப்பூர் அறநிலையத்துறை உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர் உதவி ஆணையர் ஹர்சினி, உதவி ஆணையர் (சரிபார்ப்பு) கருணாநிதி ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் செயல் அலுவலர் ரத்தினாம்பாள், தக்கார் வெற்றி செல்வன், கோவில் குலத்தவர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.