தட்டம்மை– ரூபெல்லா தடுப்பூசி பற்றி பரப்பப்படும் தவறான தகவல்களை குழந்தைகளின் பெற்றோர்கள் நம்ப வேண்டாம்


தட்டம்மை– ரூபெல்லா தடுப்பூசி பற்றி பரப்பப்படும் தவறான தகவல்களை குழந்தைகளின் பெற்றோர்கள் நம்ப வேண்டாம்
x
தினத்தந்தி 7 Feb 2017 4:30 AM IST (Updated: 6 Feb 2017 11:55 PM IST)
t-max-icont-min-icon

தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி பற்றி பரப்பப்படும் தவறான தகவல்களை குழந்தைகளின் பெற்றோர்கள் நம்ப வேண்டாம்

வேலூர்,

தட்டம்மை

வேலூர் மாவட்டத்தில் 9 மாதம் முதல் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம்கள் மாவட்டத்தில் பள்ளிகளில் நடந்தது. வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த தடுப்பூசி போடும் முகாமை கலெக்டர் ராமன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஆகிய 2 தொற்று நோய்களை ஒரே தடுப்பு ஊசி மூலம் தடுக்கும் தடுப்பூசி முகாம்கள் வருகிற 28–ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 9 மாத வயது முடிந்த குழந்தை முதல் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது. இந்த முகாம் முதல் கட்டமாக பள்ளிகளிலும், 2–ம் கட்டமாக அங்கன்வாடி மையங்கள் மற்றும் தொலைதூரக் கிராமங்களிலும் நடத்தப்படுகிறது. நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் இந்த முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3–ம் கட்டமாக பள்ளிகளிலும், கிராமங்களிலும் தடுப்பூசி போடாமல் விடுபட்ட குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த பணிகளில் 600 தடுப்பூசி பணியாளர்கள், 2 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள், செஞ்சிலுவை சங்கத்தின் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் ஈடுபட உள்ளனர்.

மாதாந்திர தடுப்பூசி பட்டியல்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமாக பாதுகாப்பான தடுப்பூசிகள் தேவையான வெப்ப நிலையில் பராமரிக்கப்பட்டு வழங்கப்பட இருக்கிறது. 1983–ம் ஆண்டு முதல் இந்த தடுப்பூசி தனியார் மருத்துவர்கள் மூலம் இந்தியாவில் புழக்கத்தில் இருந்தது. மத்திய அரசு மூலம் இலவசமாக தமிழகம், கர்நாடகம், கோவா, புதுச்சேரி, லட்சத்தீவுகள் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த முகாம்களை மேற்பார்வையிட உலக சுகாதார அமைப்பு, தேசிய, மாநில, மாவட்ட, வட்டார அளவிலான மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து தகவல்கள் பெற 93614 83603, 0416–225 20 25 மற்றும் 104 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு கேட்டறியலாம். தகுதியுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைக்கப்பெற்ற பள்ளி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மார்ச் மாதம் முதல் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசியானது குழந்தைகளின் மாதாந்திர தடுப்பூசி பட்டியலில் சேர்க்கப்பட்டு போடப்படும்.

10 லட்சம் குழந்தைகள்

வேலூர் மாவட்டத்தில் சுமார் 10 லட்சம் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த தடுப்பூசி அனைத்து ஆய்வுகளுக்கும் மேற்கொள்ளப்பட்டு உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய அரசின் சுகாதார துறையினால் சான்றளிக்கப்பட்டு உள்ளது. இந்த தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி பற்றி பரப்பப்படும் தவறான தகவல்களை குழந்தைகளின் பெற்றோர்கள் நம்ப வேண்டாம்.

இந்த முகாம்களை கண்காணிக்க மாவட்ட அளவில் உலக சுகாதார நிறுவனத்தின் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தடுப்பூசி போடப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கருப்பு மையினால் விரலில் அடையாளம் வைக்கப்படும். விடுபட்டவர்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டு நோய் நொடி இல்லாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story