சென்னை அணி தோல்விக்கு காரணம் என்ன? பயிற்சியாளர் பிளமிங் விளக்கம்


சென்னை அணி தோல்விக்கு காரணம் என்ன? பயிற்சியாளர் பிளமிங் விளக்கம்
x
தினத்தந்தி 18 Oct 2020 12:41 PM IST (Updated: 18 Oct 2020 12:41 PM IST)
t-max-icont-min-icon

காயம் காரணமாகவே பிராவோ இறுதி ஓவரில் பந்து வீச முடியவில்லை என்று சென்னை அணி பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சார்ஜாவில் அரங்கேறிய 34-வது லீக் ஆட்டத்தில்  டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி வீழ்ந்தது. 9-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி 7-வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது. 9-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 6-வது தோல்வியாகும்.

இந்நிலையில், காயம் காரணமாகவே பிராவோ இறுதி ஓவரில் பந்து வீச முடியவில்லை என்று டெல்லிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா இறுதி ஓவர் வீசியது குறித்து சென்னை அணி பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார்.

சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:

துரதிருஷ்டமாக பிராவோவுக்கு வலது தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பால் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஓய்வறைக்குச் சென்றதால் தான் கடைசி ஓவரில் அவரால் பந்துவீசமுடியவில்லை. பிராவோ இயல்பாகவே டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட், பல போட்டிகளில் கடைசி ஓவரில் பந்துவீசி அவர் சவால்களை வென்றுள்ளார்.

ஜடேஜாவை கடைசி ஓவரை வீச வைக்க வேண்டும் என்ற சிந்தனையில்லை. ஆனால், பிராவோவுக்கு காயம் ஏற்பட்டு அவர் பந்துவீச முடியாத காரணத்தால் தான் வேறு வழி இல்லாமல் ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மற்றபடி எங்களின் ஆட்டம், செயல்பாடு சிறப்பாகவே இருந்தது.

பிராவோவுக்கு ஏற்பட்ட காயத்தால்தான் அவரால் பீல்டிங் செய்யவும் முடியவில்லை, கடைசி ஓவரையும் வீச முடியவில்லை. இது பிராவோவுக்கே சற்று வேதனையாகத்தான் இருந்தது. தன்னால் கடைசி ஓவரை பந்துவீசமுடியவில்லை என்று வருத்தப்பட்டார்.

பிராவோவுக்கு ஏற்பட்ட காயம் சில நாட்களில் சரியாகலாம் அல்லது 2 வாரங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டியது வரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story