முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: வார்னர், பிஞ்ச் சதத்தால் ஆஸ்திரேலியா வெற்றி


முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: வார்னர், பிஞ்ச் சதத்தால் ஆஸ்திரேலியா வெற்றி
x
தினத்தந்தி 14 Jan 2020 8:46 PM IST (Updated: 15 Jan 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் நடந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை ஊதித்தள்ளியது.

மும்பை,

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக மார்னஸ் லபுஸ்சேன் இடம் பிடித்தார்.

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் இரவில் பனிப்பொழிவின் தாக்கத்தில் பந்துவீசுவது சிரமம் என்று கருதி முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார்.

இதன்படி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக துணை கேப்டன் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களம் புகுந்தனர். மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் ரோகித் சர்மா 2 பவுண்டரி அடித்து இன்னிங்சை தொடங்கினார். ஆனால் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. கம்மின்ஸ் ஒரு ஓவரை மெய்டனாக்கினார். இதனால் உருவான நெருக்கடிக்கு மத்தியில் ரோகித் சர்மா (10 ரன்), தேவையில்லாமல் ஸ்டார்க் பந்து வீச்சை அடித்து ‘மிட்-ஆப்’ திசையில் நின்ற வார்னரிடம் கேட்ச் ஆகிப் போனார்.

அடுத்து லோகேஷ் ராகுல், ஷிகர் தவானுடன் இணைந்தார். சில ஓவர்கள் நிதானத்தை கடைபிடித்த இவர்கள், அதன் பிறகு தோதான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு ஓட விட்டனர். 22 பந்தில் 3 ரன் எடுத்த தவான், ஸ்டார்க், கம்மின்ஸ் ஓவர்களில் தலா இரண்டு பவுண்டரிகள் அடித்து தனது இயல்பான பார்மை மீட்டெடுத்தார். இவர்கள் இருவரும் ஆடிய விதத்தை பார்த்த போது இந்திய அணி 300 ரன்களை தாண்டும் போலவே தோன்றியது.

ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் ஆட்டத்தின் போக்கு தலைகீழானது. அணியின் ஸ்கோர் 134 ரன்களாக உயர்ந்த போது (27.1 ஓவர்) லோகேஷ் ராகுல் (47 ரன், 61 பந்து, 4 பவுண்டரி) சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகரின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து தவான் (74 ரன், 91 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) கம்மின்சின் வேகத்தில் வீழ்ந்தார். பந்து அவரது பேட்டின் முனையில் பட்டு மேல் எழும்பி கேட்ச்சாக மாறியது.

லோகேஷ் ராகுலுக்காக 3-வது வரிசையை விட்டுக்கொடுத்து 4-வது வரிசையில் அடியெடுத்து வைத்த கேப்டன் விராட் கோலி ஏமாற்றம் அளித்தார். சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பாவின் பந்து வீச்சில் சிக்சர் பறக்க விட்ட கோலி (16 ரன்) அடுத்த பந்தில் அவரிடமே பிடிபட்டார். அடுத்த வந்த ஸ்ரேயாஸ் அய்யரும் (4 ரன்) நிலைக்கவில்லை. 30 ரன் இடைவெளியில் 4 விக்கெட்டுகளை தாரை வார்த்ததால் இந்திய அணி தள்ளாடியது. ரன்ரேட்டும் வெகுவாக தளர்ந்தது.

இந்த சூழலில் ரிஷாப் பண்டும், ரவீந்திர ஜடேஜாவும் இணைந்து அணியை ஓரளவு மீட்பது போல் தெரிந்தது. ஆனால் அவர்களும் ரன்ரேட்டை உயர்த்த முயற்சித்த சமயத்தில் ஆட்டம் இழந்ததால் பின்னடைவாக அமைந்தது. ஜடேஜா 25 ரன்னிலும் (32 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரிஷாப் பண்ட் 28 ரன்னிலும் (33 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினர்.

இறுதி கட்டத்தில் குல்தீப் யாதவ் (17), முகமது ஷமி (10 ரன்) ஆகியோரது இரட்டை இலக்க பங்களிப்புடன் இந்திய அணி 250 ரன்களை கடந்தது. முடிவில் இந்திய அணி 49.1 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் துல்லியமாக வீசி இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தி விட்டனர். மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து 256 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை டேவிட் வார்னரும், கேப்டன் ஆரோன் பிஞ்சும் தொடங்கினர். ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோரது பந்துவீச்சை சிரமமின்றி எதிர்கொண்டு ரன்கள் திரட்டிய இவர்கள் சுழற்பந்து வீச்சையும் போட்டுத் தாக்கினர். குல்தீப் யாதவ், ஜடேஜா பந்து வீச வந்த போது, வார்னர், பிஞ்ச் இருவரும் சர்வ சாதாரணமாக பந்தை சிக்சருக்கு தூக்கி நிலைகுலைய வைத்தனர். முன்னதாக வார்னர் 5 ரன்னில் இருந்த போது, கேட்ச் ஆனதாக நடுவர் விரலை உயர்த்தினார். பிறகு அவர் டி.ஆர்.எஸ். கேட்ட போது, டி.வி. ரீப்ளேயில் பந்து பேட்டில் உரசவில்லை என்பது தெரிய வந்ததால் தப்பினார்.

இவர்களின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போட, இந்திய கேப்டன் கோலி, பந்து வீச்சு, பீல்டிங் வியூகத்தை பலதடவை மாற்றி அமைத்தும் பலன் இல்லை. பிஞ்சுக்கு (62 ரன்னில் இருந்த போது) குல்தீப் யாதவின் சுழலில் எல்.பி.டபிள்யூ. கேட்டு கோலி நடுவரிடமே வாதிட்டு பார்த்தார். எதுவும் சாதகமாக அமையவில்லை. பிரதான 5 பவுலர்களின் பந்துவீச்சு எடுபடாத நிலையில் பகுதி நேர பவுலர்களை கோலி பயன்படுத்தாதது ஆச்சரியம் அளித்தது.

இந்திய பவுலர்களை கலங்கடித்த வார்னர் தனது 18-வது சதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து பிஞ்ச் தனது 16-வது சதத்தை எட்டினார். கடைசி வரை இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்ட இந்திய பவுலர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.

ஆஸ்திரேலிய அணி 37.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 258 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. வார்னர் 128 ரன்களுடனும் (112 பந்து, 17 பவுண்டரி, 2 சிக்சர்), ஆரோன் பிஞ்ச் 110 ரன்களுடன் (114 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். வார்னர் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒரு நாள் போட்டி வருகிற 17-ந்தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது.

தவான், வார்னர் சாதனை

* இந்திய வீரர் ஷிகர் தவான் 25 ரன்களை தொட்ட போது, ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்த 5-வது இந்தியர் என்ற சிறப்பை பெற்றார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 25 ஆட்டங்களில் ஆடி 4 சதம், 5 அரைசதம் உள்பட 1,049 ரன்கள் சேர்த்துள்ளார். ஏற்கனவே சச்சின் தெண்டுல்கர், ரோகித் சர்மா, டோனி, விராட் கோலி ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

* ஆஸ்திரேலிய தொடக்க வீரர் வார்னர் 10 ரன் எடுத்த போது, ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை (115 இன்னிங்ஸ்) கடந்த ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். ஒட்டுமொத்தத்தில், அதிவேகமாக இந்த இலக்கை எட்டியவர்களின் பட்டியலில் தென்ஆப்பிரிக்காவின் அம்லா (101 இன்னிங்ஸ்), வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் (114), இந்தியாவின் விராட் கோலி (114) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் வார்னர் உள்ளார்.

* ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர், ஆரோன் பிஞ்ச் இருவரும் சதம் அடித்து மிரட்டினர். இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதம் காண்பது இது 2-வது நிகழ்வாகும்.

20 ஆண்டு கால சாதனை முறியடிப்பு


இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் வார்னரும், பிஞ்சும் முதல் விக்கெட்டுக்கு 258 சேர்த்து பிரமாதப்படுத்தினர். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக தொடக்க விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்தனர். இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு கொச்சியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன்- கிப்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 235 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த 20 ஆண்டுகால சாதனையை வார்னர்-பிஞ்ச் ஜோடி தகர்த்தது.

மேலும் ஒட்டுமொத்தத்தில் இந்தியாவுக்கு எதிராக ஒரு விக்கெட்டுக்கு குவிக்கப்பட்ட மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப்பாகவும் இது பதிவானது. 2016-ம் ஆண்டு பெர்த்தில் நடந்த ஆட்டத்தில் 3-வது விக்கெட்டுக்கு ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித், ஜார்ஜ் பெய்லி இணை 242 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் முந்தைய அதிகபட்சமாக இருந்தது.

முதல்முறையாக....

ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இது 5-வது நிகழ்வாகும். அதே சமயம் அந்த அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது இதுவே முதல் முறையாகும். இந்திய அணி இந்த மாதிரியான மோசமான தோல்வியை சந்திப்பது இது 5-வது முறையாகும்.

அத்துடன் 250 ரன்களுக்கு மேலான இலக்கை ஒரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிகரமாக விரட்டிப்பிடிப்பது இது 3-வது முறையாகும். இங்கிலாந்து அணி 2016-ம் ஆண்டு இலங்கையையும் (256-0), தென்ஆப்பிரிக்க அணி 2017-ம் ஆண்டில் வங்காளதேசத்தையும் (282-0) இந்த வகையில் வீழ்த்தி வெற்றிக்கனியை பறித்திருந்தது.

தோல்வி குறித்து கோலி கருத்து

தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்று துறைகளிலும் ஆஸ்திரேலியா எங்களை முழுமையாக தோற்கடித்து விட்டது. இது வலுவான ஆஸ்திரேலியா. அப்படிப்பட்ட அணிக்கு எதிராக நன்றாக விளையாடாவிட்டால் பாதிப்பு நமக்கு தான் ஏற்படும். நாங்கள் போதுமான ரன்கள் எடுக்கவில்லை. மேலும் குறிப்பிட்ட பகுதியில் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு அதிகமான மதிப்பு (பந்தை அடித்து விரட்டாமல் தடுத்து ஆடுவது) கொடுத்து விட்டோம். அது தான் பின்னடைவுக்கு வித்திட்டது. ராகுலுக்கு வழிவிடும் வகையில் 4-வது வரிசையில் பேட்டிங் செய்தேன். அடுத்த ஆட்டத்தில் இதை மாற்றுவது குறித்து யோசிப்போம்.’ என்றார்.

பந்து தாக்கியதால் ரிஷாப் பண்ட் அதிர்ச்சி

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வீசிய ஒரு பவுன்சர் பந்து, இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டுவின் (28 ரன்) பேட்டில் பட்டு ஹெல்மெட்டையும் பலமாக தாக்கியதோடு, கேட்ச்சாகவும் மாறியது. பந்து தாக்கிய வேகத்தில் தலைக்குள் ஏதோ அதிர்வு இருப்பதாக அவர் உணர்ந்ததால் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இதனால் அவர் விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக மனிஷ் பாண்டே பீல்டராக இறங்கினார். விக்கெட் கீப்பிங் பணியை லோகேஷ் ராகுல் கவனித்தார்.

Next Story