போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை சஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமீன்


போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை சஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமீன்
x
தினத்தந்தி 12 Dec 2020 2:00 AM IST (Updated: 12 Dec 2020 2:03 AM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை சஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

பெங்களூரு, 

பெங்களூருவில் போதைப்பொருள் பயன்படுத்துவது மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கன்னட திரையுலகில் பிரபல நடிகைகளாக இருந்து வரும் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியை போலீசார் கைது செய்திருந்தனர். இவர்களில் நடிகை சஞ்சனாவின் வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி சோதனை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவருக்கு போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி, அன்றைய தினமே கைது செய்தார்கள்.

பின்னர் காவலில் எடுத்து போலீசார் விசாரித்ததில், நடிகை சஞ்சனா விருந்து நிகழ்ச்சிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதுடன், அவருக்கு போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக காட்டன் பேட்டை போலீஸ் நிலையத்தில் நடிகை சஞ்சனா மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவானது. போலீஸ் விசாரணையை தொடர்ந்து, செப்டம்பர் மாதம் 16-ந் தேதி பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா மத்திய சிறையில் சஞ்சனா அடைக்கப்பட்டார்.

போதைப்பொருள் விவகாரத்தில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் சஞ்சனா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, ஜாமீன் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சஞ்சனா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி சீனிவாஸ் ஹரீஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கு விசாரணை நடக்கும் போது நடிகை சஞ்சனா ஆஸ்துமா மற்றும் மூச்சு திணறலால் அவதிப்படுவதாலும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று, சஞ்சனாவின் வக்கீல் வாதிட்டார்.

இதனை ஏற்ற நீதிபதி சீனிவாஸ் ஹரீஷ்குமார், நடிகை சஞ்சனாவின் உடல் நிலை குறித்து வாணிவிலாஸ் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தி, அதற்கான அறிக்கையை கோர்ட்டில் வழங்கும்படி உத்தரவிட்டார். மேலும் மருத்துவ பரிசோதனை அறிக்கையின்படி சஞ்சனாவுக்கு ஜாமீன் வழங்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி, வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில் நடிகை சஞ்சனாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை கோர்ட்டில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அதே நேரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் ஆஜரான சிறப்பு வக்கீல் வீரண்ணா திகடி வாதிடும் போது, சஞ்சனாவுக்கு தற்சமயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், மருந்து மற்றும் மாத்திரைகளால் அவருக்கு ஏற்பட்டு உள்ள நோயை சரி செய்து விடலாம் என்று மருத்துவ பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால், ஜாமீன் வழங்குவதை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் சஞ்சனாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரைத்திருப்பதால், ஜாமீன் வழங்க வேண்டும் என்று சஞ்சனா வக்கீல் கூறி இருந்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சீனிவாஸ் ஹரீஷ்குமார், நடிகை சஞ்சனாவின் ஜாமீன் மனு மீதான வழக்கில் 11-ந் தேதி(நேற்று) தீர்ப்பு கூறப்படும் என்று உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி, சஞ்சனாவின் ஜாமீன் மனு மீதான வழக்கில் நேற்று நீதிபதி சீனிவாஸ் ஹரீஷ்குமார் தீர்ப்பு கூறினார். அப்போது உடல் நலக்குறைவு காரணமாக சஞ்சனா அவதிப்படுவதாலும், அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாலும், நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதாவது ரூ.3 லட்சம் பிணைத்தொகை வழங்க வேண்டும், போதைப்பொருள் வழக்கில் சாட்சிகளை அழிக்க முயற்சிக்க கூடாது, போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், 15 நாட்களுக்கு ஒரு முறை போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை நீதிபதி விதித்துள்ளார்.

உடல் நலக்குறைவை காரணம் காட்டி ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி இருப்பதால் பரப்பனஅக்ரஹாராவில் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வந்த நடிகை சஞ்சனா நிம்மதி அடைந்துள்ளார். போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ராகிணிக்கு இன்னும் ஜாமீன் கிடைக்காததால் அவர் சிறைவாசம் அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story