காலா படத்திற்கு பின் என்னவென்பது ஆண்டவன் கையில் இருக்கிறது: நடிகர் ரஜினிகாந்த்
காலா படத்திற்கு பின் என்னவென்பது ஆண்டவன் கையில் இருக்கிறது என சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
சென்னை,
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் 5வது நாளாக இன்று ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் மத்திய சென்னை, வடசென்னை மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.
அதற்குமுன் ரசிகர்கள் மத்தியில் அவர் பேசும்பொழுது, 1960களில் மெட்ராஸ் பற்றி கர்நாடகாவில் பெருமையாக பேசி கொள்வார்கள். 1973ல் முதன்முறையாக சென்னைக்கு வந்தேன். எனக்குள் இருந்த நடிப்பு திறமையை கண்டுபிடித்தவன் எனது நண்பன் ராஜ்பகதூர். சென்னை எனக்கு எப்பொழுதுமே மெட்ராஸ்தான்.
வளர்ப்பு மகனை போன்று என்னை வளர்த்தவர் இயக்குநர் பாலசந்தர். நீ தமிழை கற்று கொள் உன்னை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்கிறேன் என்றார் பாலசந்தர்.
இயக்குநர்கள் சுரேஷ் கிருஷ்ணா, மணிரத்னம் போன்றோர் என்னை சூப்பர் ஸ்டார் ஆக்கினார்கள்.
இந்தியாவே என்னை திரும்ப பார்க்க வைத்தவர் இயக்குநர் ஷங்கர். என்னுடைய கலை வாழ்க்கை 2.Oவில் வந்து நிற்கிறது. ஏப்ரல் 14ந்தேதிக்கு படம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
காலா படத்தில் வித்தியாசமான ரஜினிகாந்தை காண்பித்துள்ளார் இயக்குநர் ரஞ்சித். அதன்பிறகு என்ன என்பது ஆண்டவன் கையில் இருக்கிறது.
எனது உயிரை மீட்டு கொண்டு வந்தது ரசிகர்களின் பிரார்த்தனைதான். ரசிகர்களின் அன்புக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
சிங்கப்பூரில் நான் சிகிச்சை பெற்றபொழுது ரசிகர்கள் செய்த பிரார்த்தனையால் மீண்டு வந்தேன். சினிமா, அரசியலில் வர வேண்டாம். உயிரோடு வருவதே போதும் என சிகிச்சையின்பொழுது ரசிகர் ஒருவர் கடிதம் எழுதினார்.
எல்லாவற்றுக்கும் கனவே அடிப்படை. அதனை நியாயமான முறையில் அடைய முயற்சிக்க வேண்டும். கனவில் உள்ள சந்தோஷம் நனவில் இருக்காது. தனியாக இருக்கும்பொழுது உன்னையே நீ மதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.