தேடலால் தொழில்முனைவோர் ஆனவர்...


தேடலால் தொழில்முனைவோர் ஆனவர்...
x
தினத்தந்தி 28 March 2022 11:00 AM IST (Updated: 26 March 2022 6:23 PM IST)
t-max-icont-min-icon

நமக்குத் தெரிந்த துறையில் புதுமைகளைப் புகுத்தி வாடிக்கையாளரை ஈர்க்க முயற்சிக்கும் எந்த முயற்சியும் தோற்காது.

னது தேவைக்காக பொருட்கள் தயாரிக்கத் தொடங்கி, தொழில்முனைவோராக வெற்றி பெற்றவர் ஜென்சிலின் ரெமிலா. முற்றிலும் இயற்கையான பொருட்களைக் கொண்டு செய்யப்படும் அவரது தயாரிப்புகளுக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். சொந்த நிறுவனம் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வரும் அவரது பயணத்தை இங்கே விவரிக்கிறார்...

“எனது பூர்வீகம் நாகர்கோவில் அருகில் உள்ள வில்லுக்குறி கிராமம். மென்பொருள் துறையில் பொறியியல் படித்து முடித்து சென்னையில் வேலைக்குச் சேர்ந்தேன். இரண்டு வருடங்களில் எனக்கு திருமணம் ஆனது. கணவரும் எங்கள் ஊர்தான். ஐ.டி துறையில் பணி புரிகிறார். திருமணமாகி ஒரு வருடத்தில் மகன் பிறந்தான். கர்ப்பமான சில மாதங்களிலேயே, ‘வேலைக்கு போக வேண்டாமே’ என கணவர் பாசம் காட்டியதால், பணியை ராஜினாமா செய்தேன்.

எங்கள் குழந்தைக்கு வறண்ட சருமம். சந்தையில் கிடைக்கும் சோப்பை பயன்படுத்தி குளிக்க வைத்தால் மேலும் வறண்டுபோய் அவதிப்படுவான். அவனுடைய வேதனையை நான் புரிந்து கொண்டேன். அதே சமயம் என்ன செய்வது எனத்  தெரியாமல் கலக்கமாகவும் இருந்தது.

இது மாதிரி பிரச்சினைக்கு மூலிகைகள் கலந்த சோப் உதவும் என இணையத்தில் படித்து தெரிந்து கொண்டேன். அதனால் கடைகளில் சென்று கேட்டபோது, அங்கு பலவித சோப்கள் இருந்தன. இப்படி ஒவ்வொரு முறையும் சோப்பினை தேடுவதற்கு பதிலாக, நாமே ஏன் தயாரிக்கக் கூடாது என்று அதற்கான முயற்சியை தீவிரப்படுத்தினேன்.

என்னுடைய குழந்தையை பராமரிப்பதற்கு பாரம்பரிய முறையில் இயற்கையாக தயாரிக்கப்பட்ட பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்று ஒவ்வொன்றையும் தேடித்தேடி பயன்படுத்தினேன். ஆனால், எல்லாப் பொருட்களிலும் ஏதோ ஒரு வகையில் ரசாயன பொருட்கள் கலந்து இருந்தன.

அதன்படி சில மூலிகைகளை வாங்கி அதைக் கொண்டு சோப்பு தயாரித்து பார்த்தேன். முதல் முயற்சி எப்படி இருக்குமோ என்ற பயம் இருந்தாலும் துணிந்து முயற்சி செய்தேன். மூலிகைகளுடன் வெண்ணெய், பாதாம் ஆயில், தேங்காய் எண்ணெய் எல்லாம் சேர்த்து நான் தயாரித்த சோப், மகனுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. எனக்கோ வானத்தில் மிதக்கிற மாதிரி சந்தோஷம்.

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது கண் மை ஞாபகம் வந்தது. அந்த தயாரிப்பில் என் கவனத்தை செலுத்தினேன். இவ்வாறு குழந்தைக்காக பொருட்கள் தயாரித்த என்னை சிறுதொழில் முனைவோராக மாற்றியது என் அக்கா தான்.

நான் தயாரித்த சோப்பை தனது குழந்தைகளுக்கு பயன்படுத்திப் பார்த்த அவர் ‘இதையே ஏன் நீ ஒரு தொழிலாக செய்யக்கூடாது’ என்று கேட்டார். அவரும் ஒரு தொழில்முனைவோர் என்பதால், இந்த மாதிரி இயற்கையாக தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது என்று அவருடைய  அனுபவத்தைக் கூற, அதற்கான முயற்சியில் இறங்கினேன்.



இது நாள் வரை என் குழந்தைக்கு மட்டுமே பயன்படுத்தியதால், சிறிய அளவில்தான் தயாரித்து வந்தேன். அதுவும் சோப்பு தீரும் போது அடுத்த செட் சோப்பினை தயாரிப்பேன். இப்போது பெரிய அளவில் இறங்கும்போது, பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்தேன். நான் வேலைக்கு சென்றபோது, அவ்வப்போது கொஞ்சம் பணம் சேமிப்பது வழக்கம். அதில் இருந்து ஐயாயிரம் ரூபாய் மட்டும் எடுத்து சோப் மற்றும் கண் மை தயாரிக்கும் தொழிலைத் தொடங்கினேன்.

இப்படியாக, சோப்பு, கண் மை ஆகிய இரண்டு பொருட்களும் எனது உற்பத்தி மையத்தில் இருந்து மெதுவாக வாடிக்கையாளர்களுக்குச் செல்லத் தொடங்கியது. வாய் வழி விளம்பரத்திலேயே சில டஜன் சோப்புகள் விற்கத் தொடங்கி இருந்த சமயத்தில், அதே தொடர்புகளால் வாட்ஸ்ஆப் மூலமாக மேலும் பல வாடிக்கையாளர்கள் எனக்கு அறிமுகமாகினர்.

இவ்வாறு ஒவ்வொரு பொருளாக மூலிகைகளைக் கொண்டு தயாரிப்பது அடுத்தடுத்து தொடர்ந்தது. அந்த வகையில் இப்போது என்னிடம் 80-க்கும் அதிகமான தயாரிப்புகள் உள்ளன. இது மட்டுமன்றி வாடிக்கையாளர் எப்படி கேட்கிறாரோ அதற்கு ஏற்ற வகையிலும் தயாரித்துக் கொடுக்கிறேன்.

எந்தத் தொழில் செய்வதாக இருந்தாலும் அதைப் பற்றி முழுமையாகப் படிப்பது அவசியம். இந்த 3 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் காஸ்மெட்டாலஜி சான்றிதழ் படிப்பு மற்றும் அட்வான்ஸ்டு காஸ்மெட்டாலஜி டிப்ளமோ ஆகியவை கற்றுத் தேர்ந்திருப்பதால், எனது உற்பத்தியில் எந்தப் பிரச்சினையும் இல்லாதபடி பார்த்துக்கொள்ள முடிகிறது. வேலைப்பளு குறைய வேண்டும் என்பதற்காக பெண்கள் இருவரை பணிக்கு அமர்த்தி உள்ளேன். வறுமையில் தத்தளிக்கும் பெண்களுக்கு இந்தத் தொழிலில் பயிற்சி அளித்து அவர்களுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற்படுத்திக் கொடுக்க முயற்சித்து வருகிறேன். கூடிய விரைவில் அது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.

தற்போது அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள நமது மக்களுக்கு எனது தயாரிப்புகள் செல்லத் தொடங்கி இருப்பதை அடுத்தக் கட்ட தொழில் முன்னேற்றமாகக் கருதுகிறேன்.

பெண்கள் அனைவரும் தங்கள் மீது திடமான நம்பிக்கை வைக்க வேண்டும். சொந்தக் காலில் நிற்க வேண்டும் எனக் கருதும் பலரும், அதற்கான முயற்சிகளில் பல தவறுகளை செய்துவிட்டு பிறகு திண்டாடுகிறார்கள். ஆனால், நமக்குத் தெரிந்த துறையில் புதுமைகளைப் புகுத்தி வாடிக்கையாளரை ஈர்க்க முயற்சிக்கும் எந்த முயற்சியும் தோற்காது. அங்கு புதிதாக ஒரு தொழில்முனைவோர் உருவாகுவார் என்பது நிச்சயம்’’ என்றார் ரெமிலா. 

Next Story