''கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் வித்தியாசம் உள்ளது'' - துஷாரா விஜயன்


கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் வித்தியாசம் உள்ளது - துஷாரா விஜயன்
x
தினத்தந்தி 3 Aug 2023 4:59 PM IST (Updated: 3 Aug 2023 5:08 PM IST)
t-max-icont-min-icon

பக்கத்து வீட்டு பெண்மணி போல எதார்த்தமாய் பழகும் கதாநாயகிகளில் ஒருவரான துஷாரா, 'தினத்தந்தி'க்கு சிரிப்பு குறையாமல் பிரத்யேக பேட்டியளித்தார்.

காதல் மீது நம்பிக்கை உள்ளதா? யாருக்குத்தான் இல்லை.

உங்களின் காதல் அனுபவம் பற்றி சொல்லுங்களேன்? எக்கச்சக்கம் இருக்கிறது. ஒன்றிரண்டை மட்டும் சொன்னால் எல்லோரும் கோபித்து கொள்வார்களே... (சிரிக்கிறார்). எனக்கு நிறைய பேர் காதல் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். ஆனால் எனக்கு எதுவும் தோன்றவில்லை. இப்போது வரை நான் முரட்டு சிங்கிள் தான். சத்தியமா நம்புங்க!

இரட்டை மூக்குத்தி, கிராமத்து அடாவடியாக 'சார்பட்டா' படத்தில் ஆர்யாவுக்கு நிகராக, கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து நடித்தவர் துஷாரா விஜயன். அந்தப் படம் வெளியான சமயம், 'மாரியம்மா... மாரியம்மா...' என்று செல்லும் இடமெல்லாம் அன்புடன் அழைக்கப்பட்ட அழகிய நாயகி.

தமிழகத்தில் தென் திசை மாவட்டங்களில் ஒன்றான திண்டுக்கல்லில் பிறந்த துஷாரா, அழகில் மட்டுமல்ல பேச்சிலும் அச்சு வெல்லம் போல தான்... பக்கத்து வீட்டு பெண்மணி போல எதார்த்தமாய் பழகும் கதாநாயகிகளில் ஒருவரான துஷாரா, 'தினத்தந்தி'க்கு சிரிப்பு குறையாமல் பிரத்யேக பேட்டியளித்தார். மனதில் தோன்றியதை ஒளிவுமறைவின்றி 'பட்'டென கொட்டினார்.


அதன் விவரம் வருமாறு:-

அடுத்து என்ன படம் நடிக்கிறீங்க?

பாலாஜி மோகன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறேன். காளிதாஸ், அமலாபால் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இது தவிர மேலும் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறேன்.

'சார்பட்டா'வில் கிராமத்து கதாபாத்திரம், 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் மாடர்ன் கேர்ள். இந்த வித்தியாசத்தை எப்படி கையாளுகிறீர்கள்?

என்னைப் பொருத்தவரை கதாபாத்திரங்களை விரும்பி, ரசித்து, உணர்ந்து நடிக்கிறேன். அவ்வளவு தான். சினிமா மீது எனக்கு அளவு கடந்த காதல் உண்டு. அதன் தீவிரம் ஒவ்வொரு நாளும் கூடத்தான் செய்கிறது. கதாபாத்திரங்கள் வாழ்வியல் நிஜம் தான். அதை விருப்பத்துடன் கையாண்டால் வெற்றி தானே...

என்ஜினீயரிங் படிப்பை பாதியிலேயே நிறுத்த காரணம் என்னவோ? படிப்பில் கொஞ்சம் வீக்கா...?

ஹலோ... நான் பிளஸ்-2 தேர்வில் 1,062 மார்க் வாங்கினேன். கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிப்பை எடுத்து படித்தேன். விருப்பப்பட்டு படிக்கல. வீட்டில் கட்டாயப்படுத்தினாங்க. அவங்களுக்காக படித்தேன். ஆனாலும் சினிமா ஆசை என்னை விடவில்லை. 'டக்'குனு படிப்பை நிறுத்திட்டு மாடலிங்கில் இறங்கிட்டேன். அப்படி இப்படினு சினிமாவுக்கு வந்தாச்சுல...

சினிமாவுக்கு வர என்ன காரணம்?

அந்த காரணம் மட்டும் தெரிந்தால் சினிமாவை விட்டு போய்விடுவேன். காரணம் இல்லாமல் வருவதே காதல். அந்த காதல் எனக்கு சினிமா மீது. சுருக்கமாக சொல்லப்போனால், சினிமா மீது ஒரு 'அன்கண்டிஷனல் லவ்'.

உங்களுக்கு எதில் போதை?

சினிமா என்பதே ஒரு போதை தான். சிறிய வயதில் மேடையில் நடனம், நாடகத்தில் பங்கேற்றபோது பார்வையாளர்களின் கைதட்டலே எனக்கு ஒரு விதமான போதையை ஏற்படுத்தும். அந்த போதை அளவில்லாதது. அந்த போதை எனக்கு பிடித்தது. நாளாக நாளாக அந்த போதை அளவுக்கு அதிகமாக ஏறிவிட்டது.

முதல் சினிமா அனுபவம் பற்றி சொல்லுங்களேன்...

மாடலிங்கில் இருக்கும்போது எனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவேன். அது எனது பழக்கம். விதவிதமான உடைகள் அணிந்து புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டேன். அந்த புகைப்படங்களை பார்த்து டைரக்டர் சந்துரு எனக்கு போன் செய்தார். அப்படி நான் நடித்த முதல் படம் தான் 'போதை ஏறி புத்தி மாறி'. இந்த படம் என்னால் மறக்க முடியாதது. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு அனுபவமும் என்றுமே என் மனதில் நிறைந்திருக்கிறது. எனது முதல் படத்தை பார்த்து தான் ரஞ்சித் எனக்கு போன் பண்ணினார். அப்படி வந்தது தான் 'சார்பட்டா'.

'சார்பட்டா' படத்தில் இரட்டை மூக்குத்தி அணிந்து நடித்திருப்பீர்கள். அந்த முகம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

பிடிக்காமலா நடிப்பாங்க... அந்த கதையை என்னிடம் சொல்லும்போதே, அந்த கேரக்டருக்காக நான் முழு அளவில் தயாராகி விட்டேன். எப்போதுமே கதாபாத்திரத்துக்காக எதையும் செய்யக்கூடியவள் நான். எனவே அந்தக் கால கிராமத்து 'லுக்'குக்கு நான் தயாரானேன்.


அது ஒரிஜினல் மூக்குத்தியா?

மூக்குத்தி ஒட்டப்பட்டது என்றாலும், அந்த மூக்குத்திக்காக மூக்கில் 'குளூ' தடவப்பட்டது. அந்த பசையால் மூக்கில் சில சமயம் தோலும் உரிந்து போனது. வலியும் இருந்தது. இருந்தாலும் அதையெல்லாம் சமாளித்து நடித்தேன்.

ஒருவேளை நீங்கள் சினிமாவுக்கு வராமல் போயிருந்தால் என்ன ஆகியிருப்பீர்கள்?

வேலைவெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டு இருந்திருப்பேன். சிம்பிளா சொல்லணும்னா, வெட்டி ஆபிசரா இருந்திருப்பேன்.

பிடித்த டைரக்டர்கள் பற்றி...

பாலு மகேந்திரா, மணிரத்னம், ரஞ்சித். அதிலும் மணிரத்னம் இயக்கத்தில் வந்த 'மவுன ராகம்' படம் இருக்கிறதே... என்ன மாதிரியான படம்யா அது? எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.

துஷாராவை வில்லியாக பார்க்கலாமா, வாய்ப்பு இருக்கிறதா?

பாசிட்டிவ் ரோல், நெகட்டிவ் ரோல் அப்படி யெல்லாம் நான் பார்க்கிறதே இல்லை. 3 மணி நேரம் படத்தில் நான் 5 நிமிடங்கள் வந்தாலும், அது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். இப்போது வரை கதாபாத்திரத்தை மிகவும் கவனமாக தேர்வு செய்து வருகிறேன். என்னை பொறுத்தவரை சவாலான கதாபாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

எந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை?...

ரசிகர்களுக்கும், எனக்கும் ஒரு கனெக்ஷன் இருக்கவேண்டும். நெகட்டிவ் ரோல் என்றாலும், அது ரசிகர்களுக்கு பிடித்திருக்க வேண்டும். அதுதான் எனக்கு முக்கியம். அந்தவகையில் சவாலும், புதுமையும் இருந்தால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க ஐயம் ரெடி.

துஷாரா என்ற பெயர் வித்தியாசமாக இருக்கிறதே, அதன் அர்த்தம் தான் என்ன?

என்ன பண்ண... தாத்தா அந்த காலத்திலேயே எனக்கு ஸ்டைலிஷாக பெயர் வைத்துவிட்டார். துஷாரா என்றால் 'மலைகளின் பெண் தெய்வம்' என்று அர்த்தமாம். எவ்வளவு அழகாக அமைஞ்சுருக்குல்ல என் பெயர். எப்படி? (சூப்பர் என்றோம்)

நடிகைகள் கவர்ச்சி காட்டுவது சரியா, தவறா?

அது அவரவர் விருப்பத்தை பொருத்தது.


அப்படி என்றால், நீங்கள் கவர்ச்சியாக நடிப்பீர்களா?

கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் வித்தி யாசம் இருக்கிறது. ரசிகர்கள் முகம் சுழிக்கும் வகையில் நான் எப்போதும் நடிக்க மாட்டேன். எனக்கான கவர்ச்சியின் எல்லை எது? என்று எனக்கு தெரியும். எனக்கு பொறுத்தமான அளவில், எனக்கு ஏற்ற நிலையில் கவர்ச்சியாக நடிப்பேன். அதற்கு தயார் தான்.

நீங்கள் அம்மா செல்லமா, அப்பா செல்லமா?

அப்பா மீது அளவுகடந்த பாசம் இருந்தாலும், நான் என்றைக்கும் அம்மா செல்லம் தான்.

சினிமாவில் உங்கள் லட்சியம் என்ன?

வித்தியாசமான கதாபாத் திரங்களில் தோன்ற வேண்டும். பெயர் சொல்லும்படியான படங்களில் நடிக்க வேண்டும். ரசிகர் களுக்கு பிடித்த நடிகையாக இருக்க வேண்டும்.

இப்படி சொல்லி கண்ணடித்து நமக்கு விடை கொடுத்தார், துஷாரா.


Next Story