துணிவு : சினிமா விமர்சனம்


துணிவு : சினிமா விமர்சனம்
x
நடிகர்: அஜித் நடிகை: மஞ்சுவாரியர்  டைரக்ஷன்: வினோத் இசை: ஜிப்ரான் ஒளிப்பதிவு : நீரவ்ஷா

மாநகரத்தின் மைய பகுதியில் இயங்கி வரும் வங்கியில் கொள்ளை அடிக்க ஒரு கும்பல் நுழைந்து ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் பணைய கைதிகளாக பிடித்து வைக்கின்றனர்.

வாடிக்கையாளராக உள்ளே செல்லும் அஜித் கொள்ளையர்களை வீழ்த்தி வாடிக்கையாளர்களையும், வங்கி ஊழியர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.

வங்கிக்குள் இருக்கும் அஜித்தை தீவிரவாதி என்று பட்டம் கட்டி திசை திருப்ப முயல்கிறது வில்லன் கோஷ்டி. அஜித்தை பிடிக்க காவல்துறையும் கமண்டோ படையும் முழு வீச்சில் இறங்குகிறது.

அஜித் ஏன் வங்கிக்குள் நுழைந்தார், அவருடைய நோக்கம் என்ன? வில்லனுக்கும் அஜித்துக்குமான பகை எப்படிப்பட்டது என்பதை காட்சிக்கு காட்சி ஆக்ஷன் கலந்து சொல்லி இருக்கிறார்கள்.

எங்கும் எதிலும் அஜித் என்று சொல்லும் அளவுக்கு படம் முழுக்க நிறைந்திருக்கிறார் அஜித். ஜாலி நடனம், வில்லன் சிரிப்பு, நிறுத்தி நிதானமாக பேசும் வசனம், போலீசுக்கு செக் வைப்பது, வில்லனை பழிவாங்குவது என்று எல்லா இடங்களிலும் சதம் அடிக்கிறார்.

வெள்ளை தாடி, வெள்ளை உடை என வசீகரிக்கவும் செய்கிறது அவரது தோற்றப்பொலிவு. காட்சியின் இயல்புத் தன்மைக்காக தன்னை வருத்திக்கொண்டும் நடித்து இருக்கிறார்.

மஞ்சுவாரியருக்கு அழுத்தமான வேடம். டூயட் பாடும் ஹீரோயினாக இல்லாமல் பறந்து, குதித்து சண்டை காட்சிகளில் தூள் கிளப்புகிறார். அவருடைய கதாபாத்திரத்தை இன்னும் அழுத்தமாக உருவாக்கி இருக்கலாம்.

போலீஸ் கமிஷனராக வரும் சமுத்திரகனி கதாபாத்திரத்தில் ஒன்றிப்போய் நடித்துள்ளார். ஜான் கொக்கேன் ஸ்டைலான வில்லன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக இருக்கிறார்.

நிருபராக வரும் மோகன சுந்தரம் யதார்த்தம் பேசி சிரிக்க வைக்கிறார். வங்கி மேலாளராக வரும் ஜி.எம்.சுந்தர், இன்ஸ்பெக்டர் பகவதி பெருமாள், வங்கி அதிகாரி பிரேம் என பலரும் தங்கள் கடமையை கச்சிதமாக செய்துள்ளனர்.

ஜிப்ரான் இசையில், 'சில்லா சில்லா' பாடலுக்கு தியேட்டரில் விசில் சத்தம். பின்னணி இசை ஹாலிவுட் தரம்.

ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா வங்கிக்குள் நடக்கும் சண்டை காட்சிகள், கடலுக்குள் சிறிப்பாயும் படகு, ஆகாயத்தில் ஒலிக்கும் குண்டு சத்தம் என அனைத்தையும் பிரமாதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

சாமானிய மக்களின் பணம் எப்படி கண்ணுக்குத் தெரியாமல் சூறையாடப்படுகிறது, எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் நுணுக்கமாக சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் வினோத்.

பிளாஷ்பேக் காட்சி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய சில குறைகள் இருந்தாலும் இந்த துணிவு...கம்பீரத் துணிவு!


Next Story