சாகுந்தலம்: சினிமா விமர்சனம்


சாகுந்தலம்: சினிமா விமர்சனம்
x
நடிகர்: தேவ் மோகன் நடிகை: சமந்தா  டைரக்ஷன்: குணசேகர் இசை: மணிசர்மா ஒளிப்பதிவு : ஜோசப் வி. சேகர்

துஷ்யந்தன், சகுந்தலை வாழ்க்கையை பற்றிய புராண படமாக வந்துள்ளது சாகுந்தலம்.

விஸ்வாமித்திர முனிவருக்கும், மேனகைக்கும் பிறந்த சகுந்தலையான சமந்தா மடத்தில் கன்வ மகரிஷியின் மகளாக வளர்கிறார். ஒருநாள் துஷ்யந்தனான தேவ் மோகன் விலங்குகளை துரத்திக் கொண்டே ஆசிரமத்திற்குள் வருகிறார்.

அங்கு சமந்தாவை பார்க்கும் தேவ் மோகன் காதல் வயப்படுகிறார். சமந்தாவுக்கும் அவர் மீது காதல் வருகிறது. இருவரும் இணைகிறார்கள். பின்னர் தேவ்மோகன், அரண்மனைக்கு செல்வதாகவும், விரைவில் திரும்பி வந்து உன்னையும் அழைத்து செல்கிறேன் என்றும் சமந்தாவிடம் உறுதியளித்து விட்டு புறப்படுகிறார். ஆனால் வரவில்லை.

கர்ப்பமாகும் சமந்தா, தேவ் மோகனை தேடி அரண்மனைக்கு செல்கிறார். அங்கு சமந்தாவை, நீ யார் என்றே எனக்கு தெரியாது என்று கூறி தேவ் மோகன் அவமானப்படுத்துகிறார்.

சமந்தாவை தேவ்மோகன் தெரியாது என்று கூறுவதன் காரணம் என்ன? இருவரும் சேர்ந்தார்களா? என்பது மீதி கதை.

சகுந்தலையாக வரும் சமந்தா கச்சையும், மெல்லிடையுமாக படம் முழுவதும் பரவசப்படுத்துகிறார். துஷ்யந்தனைப் பார்த்ததும் நாணத்தோடு மரத்தின் பின்னால் மறைவது இலக்கிய ரசம். நெருக்கமான காட்சியில் தாராளம் காட்டி உள்ளார். காதலன் பிரிவில் கலங்குவது, அரசவையில் தன்னை கைவிடும் துஷ்யந்தனை உக்கிரமாக பார்ப்பது என்று நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார்.

துஷ்யந்தனாக தேவ் மோகன் நெடிய உயரம், விரிந்த தோள்கள், தீர்க்கமான கண்கள் என்று அரசகுல லட்சணத்துடன் வருகிறார். யானையுடன் சண்டையிடும் போதும், அரசவை காட்சியிலும் கம்பீரம்.

சமந்தா தோழியாக வரும் அதிதி பாலன் அதிக ஈர்ப்பை ஏற்படுத்துகிறார். துர்வாசராக வரும் மோகன்பாபு சில காட்சிகளே வந்தாலும் நிறைவு.

மேனகையாக வரும் மதுபாலா தன் பிள்ளைக்காக கலங்கி நடனம் ஆடும் இடத்தில் மனதில் இடம் பிடிக்கிறார். படகோட்டியாக வரும் பிரகாஷ்ராஜூக்கு அதிகம் நடிக்க வாய்ப்பு இல்லை.

திரைக்கதையை இன்னும் உணர்வுப்பூர்வமாக உருவாக்கி இருக்கலாம்.

புராண படத்தை அந்த காலத்து அரங்கு அமைப்புகள். யுத்தம், உடைகள், அரண்மனை, காடு மலைகள் என்று பிரமாண்டமாக படமாக்கி உள்ளார் இயக்குனர், குணசேகர்.

மணிசர்மா வித்தியாசமான இசைக்கருவிகள் மூலம் பழங்காலத்திற்கு அழைத்துச் செல்கிறார். மல்லிகா..மல்லிகா..பாடல் மனதில் நிற்கிறது. ஜோசப் வி. சேகர் ஒளிப்பதிவு வியப்பை தருகிறது.


Next Story