ரேசர் : சினிமா விமர்சனம்
சிறுவயதில் இருந்தே நாயகன் அகில் சந்தோசுக்கு மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் ஆக வேண்டும் என்று ஆசை. குடும்ப சூழலால் அது நிறைவேறாமல் போகிறது. வளர்ந்த பிறகு கார் கம்பெனியில் வேலை கிடைக்கிறது. கடன் பெற்று பைக் வாங்குகிறார்.
அதன்பிறகு பைக் ரேசர் ஆசை மீண்டும் துளிர்கிறது. தெருவில் நடக்கும் சாதாரண மோட்டார் பந்தய போட்டியில் பங்கேற்று பரிசு பெறுகிறார். அடுத்து பெரிய போட்டியில் பங்கேற்க தேர்வாகிறார். ஆனால் அவர் தந்தைக்கு பைக் பந்தயம் அறவே பிடிக்கவில்லை. சில வீரர்கள் பொறாமையால் அகில் சந்தோசுக்கு பகையாளிகளாக மாறுகிறார்கள்
இதையெல்லாம் மீறி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றாரா? என்பது கதை..
அகில் சந்தோஷ் கதாபாத்திரத்தில் கச்சிதம். லட்சிய கனவை மனதுக்குள்ளேயே புதைப்பது. அப்பாவின் பாசமான கண்டிப்புக்கு அடங்கி போவது, காதலில் உருகுவது, பைக் ரேசில் அவமானங்களை எதிர்கொள்வது. ஆஸ்பத்திரியில் தந்தையை பார்க்க அழுது துடித்து ஓடுவது என்று உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
லாவண்யா சிறிது நேரம் வந்தாலும் அழகில் வசீகரிக்கிறார். மகன் விருப்பங்களுக்கு எதிராக இருந்தாலும் பாசக்கார தந்தையாக மனதில் நிற்கிறார் சுப்பிரமணியன். நாயகனின் அம்மாவாக வரும் பார்வதி, நண்பர்களாக வரும் சரத், நிர்மல், சதீஷ், பைக் மெக்கானிக் ஆறுபாலா, பைக் ரேஸ் பயிற்சியாளர் அனீஸ், வில்லன் அரவிந்த் என்று அனைவரும் தங்களின் கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை வழங்கி உள்ளனர்.
நிஜ பைக் ரேஸ் வீரர்கள் நடித்து இருப்பது கதைக்கு வலிமை சேர்க்கிறது.
திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம்.
ஒரு இளைஞனின் லட்சியம், குடும்ப உறவுகள், காதல், மோதல், ரேஸ் என்று அனைத்து கமர்ஷியல் விஷயங்களையும் வைத்து நேர்த்தியான படத்தை கொடுத்து திறமையான இயக்குனராக கவனம் பெறுகிறார் டைரக்டர் சாட்ஸ் ரெக்ஸ். பரத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பிரபாகர் கேமரா பைக் பந்தயத்தை விறுவிறுப்பாக படமாக்கி உள்ளது.