இறைவன்: சினிமா விமர்சனம்
கண்டிப்பான போலீஸ் அதிகாரி ஜெயம் ரவி. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுமை இல்லாமல் அவரே சுட்டுத் தள்ளுகிறார். இதனால் சக காவல் அதிகாரிகள் மத்தியில் நிதானம் இல்லாதவர், முன் கோபக்காரர் என்ற அடையாளத்துடன் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நகரத்தில் அடுத்தடுத்து இளம் பெண்கள் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். விசாரணையில் கொலையாளி சைக்கோ என தெரிய வருகிறது. அந்த சைக்கோவை பிடிக்கும் முயற்சியில் ஜெயம் ரவி நண்பரும், போலீஸ் அதிகாரியுமான நரேன் கொல்லப்படுகிறார். சைக்கோ கொலையாளியை ஜெயம் ரவி பிடித்து கொடுத்து விட்டு வேலையை ராஜினாமா செய்கிறார்.
அதன் பிறகும் கொலைகள் தொடர்கின்றன. ஜெயம் ரவிக்கு நெருக்கமான வீட்டு பெண்களும் கடத்தப்படுகின்றனர். ஜெயம் ரவி தனியாக துப்பு துலக்குகிறார். அப்போது கொலைகாரன் பற்றி அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. கொலையாளியை ஜெயம் ரவியால் பிடிக்க முடிந்ததா? கொலைகாரனின் நோக்கம் என்ன? என்பது மீதி கதை.
மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடத்துக்கு ஜெயம் ரவி கச்சிதம். வேலையில் எந்நேரமும் இறுக்கமாக இருக்கக்கூடிய கேரக்டருக்கு முழுமையாக நியாயம் செய்திருக்கிறார்.
குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து சுலபமாக தப்புவதை சகிக்க முடியாதவர் என்பதால் வழக்கமான உடல்மொழியிலிருந்து விலகி கேரக்டருக்கான உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தி தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்.
நயன்தாரா தனது கதாபாத்திரத்தில் அழகு சேர்த்துள்ளார். காதல் கைக்கூடுவதற்காக படாத பாடுபடும் அவரின் அணுகுமுறை ரசிகர்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்துகிறது. ஆனாலும், அவருக்கு கூடுதல் காட்சிகள் இல்லாதது ஏமாற்றமே.
நரேன், ராகுல் போஸ், வினோத் கிஷன், விஜயலட்சுமி, சார்லி, ஆஷிஷ் வித்யார்த்தி, பகவதி பெருமாள் என அனைவரும் தங்கள் கேரக்டருக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
யுவன் ஷங்கர்ராஜாவின் இசையில் பாடல்களைவிட பிரம்மாண்டமான பின்னணி இசை படத்தை தாங்கிப் பிடித்துள்ளது.
ஹரி.கே.வேதாந்த்தின் ஒளிப்பதிவு சஸ்பென்ஸ் கதைக்குரிய விறுவிறுப்போடு பயணத்திருக்கிறது. இரவு காட்சிகளை படமாக்கிய விதம் சிறப்பு.
சைக்கோ கொலையாளி பின்னணியை இன்னும் வலுவாக சொல்லி இருக்கலாம்.
சஸ்பென்ஸ், திரில்லர் கதையை பெரிய நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து விறுவிறுப்பாக படமாக்கி உள்ளார் இயக்குனர் அகமத்.