சினிமா விமர்சனம்: தி லெஜண்ட்
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடை அதிபர் சரவணன் நடித்து, தயாரித்த படம்.
கடையின் பெயரைப்போலவே சூப்பர் மசாலா கதை. சரவணன் வெளிநாட்டில் படித்து உலக அளவில் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆகிறார். அவரை கவுரவித்து வேலை கொடுக்க பல நாடுகள் முன்வந்தாலும், அவற்றை எல்லாம் உதறிவிட்டு, தன் நாட்டு மக்களுக்கு குறிப்பாக சொந்த கிராம மக்களுக்கு சேவை செய்யப்போவதாக கூறி, நாடு திரும்புகிறார்.
கிராமத்தில், சின்ன வயதில் அவருடன் படித்த நண்பர் ரோபோ சங்கர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கிறார். நண்பனின் மரணம் சரவணனை மிகவும் பாதிக்கிறது. இரவு பகலாக கண்விழித்து ஆராய்ச்சி செய்து சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கிறார்.
இது, சர்க்கரை நோய்க்கு மாத்திரை-மருந்து தயாரிக்கும் தொழில் அதிபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சரவணன் மீது மருந்து கம்பெனி அதிபர் சுமன் கடும் கோபத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில், சரவணனுக்கும், தம்பி ராமய்யாவின் மகளும், கல்லூரி பேராசிரியையுமான கீதிகா திவாரிக்கும் காதல் மலர்கிறது.
சரவணன் காரில் வெடிகுண்டு வைத்து அவரை கொல்ல முயற்சி நடக்கிறது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்ப-கீதிகா திவாரி உயிரை இழப்பதுபோல் காட்டப்படுகிறது.
வில்லன்களின் சதிவலைகளை உடைத்து, சரவணன் தனது லட்சியத்தில் எப்படி வெற்றி பெறுகிறார் என்பது மீதி கதை.
கொஞ்சம் 'உலகம் சுற்றும் வாலிபன்', கொஞ்சம் 'சிவாஜி' ஆகிய படங்களின் சாயல் எட்டிப்பார்க்கிறது. சரவணனின் பிளஸ், மைனஸ்சை புரிந்து கொண்டு அவரை சூப்பர் ஹீரோவாக காட்டியிருக்கிறார்கள், டைரக்டர்கள் ஜேடி-ஜெர்ரி.
சரவணன் நிறைய அழகிகளுடன் நடனம் ஆடுகிறார். வில்லன் கும்பலுடன் ஒரு சாட்டை சண்டையும், ஒரு ரெயில் சண்டையும் போடுகிறார். (டான்ஸ் மாஸ்டர்களுக்கும், ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கும் நிறைய பங்கு.) சரவணனை ஸ்டைலாக காட்டுவதில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் கவனமாக இருந்திருக்கிறார். சரவணன், நடிப்பில் இன்னும் பயிற்சி பெறவேண்டும்.
இடைவேளைக்கு பின் இன்னொரு கதாநாயகியாக ஊர்வசி ரதேலா வருகிறார். சரவணனுக்கு அண்ணனாக பிரபு சகோதர பாசம் காட்டுகிறார். மறைந்த விவேக், நாசர், விஜயகுமார், லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான், யோகி பாபு, மயில்சாமி, சிங்கம்புலி, லதா, சச்சு என படம் முழுக்க நட்சத்திர கூட்டம்.
ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், பாடல்கள் அத்தனையும் பல முறை கேட்க தூண்டும். பணத்தை வாரி இறைத்து போடப்பட்டுள்ள பிரமாண்ட அரங்குகள், கண்கொள்ளா காட்சிகள்.