பம்பர்; சினிமா விமர்சனம்
தூத்துக்குடியில் வசிக்கும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த வெற்றி எதுவும் செய்யாமல் நண்பர்களுடன் வெட்டியாக பொழுதை கழிக்கிறார். அவ்வப்போது சிறிய அடிதடிகளிலும் இறங்குகிறார். அந்த ஊருக்கு புதிதாக பொறுப்புக்கு வரும் காவல் அதிகாரி ரவுடிகளை வேட்டையாடுகிறார்.
காவல் துறையின் நடவடிக்கைக்கு பயந்து மாலை அணிந்து சபரி மலைக்கு செல்கிறார் வெற்றி. அப்போது கேரளாவில் விற்பனை செய்யப்படும் பம்பர் லாட்டரியை வாங்குகிறார். ஆனால் அந்த சீட்டை தொலைத்து விட்டு ஊருக்கு திரும்புகிறார்.
இந்த நிலையில், வெற்றி வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு பத்து கோடி ரூபாய் விழுகிறது. அந்த பணத்தை வெற்றியால் பெற முடிந்ததா? என்பது மீதி கதை.
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் இந்த முறையும் ஜெயித்து இருக்கிறார் வெற்றி. எதிர்காலம் பற்றிய சிந்தனையோ, வாழ்கைக்கான லட்சியமோ இல்லாத இளைஞர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை புலிபாண்டி கேரக்டரில் வாழ்ந்து காண்பித்துள்ளார். காவல் துறையை டீல் செய்வது, காதலியிடம் பழகுவது, நண்பர்களிடம் நட்பு பாராட்டுவது என எல்லா இடங்களிலும் யதார்த்த நடிப்பில் பிரமாதமாக ஸ்கோர் செய்துள்ளார்.
ஷிவானி நாராயணனுக்கு வாய்ப்பு குறைவு என்றாலும் அழுத்தமான நடிப்பை வழங்கி மனதில் தங்குகிறார்.
லாட்டரி வியாபாரியாக வரும் ஹரீஷ் பேரடியின் தோற்றமும், நடிப்பும் ஆச்சரியம் தருகிறது.
வெற்றியின் நண்பராக வரும் தங்கதுரை, போலீசாக வரும் கவிதா பாரதி, கந்துவட்டிக்காரராக வரும் ஜி.பி.முத்து, போலீஸ் அதிகாரியாக வரும் அறிவு மதன், நாயகனின் அம்மாவாக வரும் ஆதிரை என எல்லோரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் வினோத் ரத்னசாமி, நெய்தல் நிலத்தையும், குறிஞ்சி நிலத்தையும் மிக அழகாக காண்பித்துள்ளார்.
கோவிந்த் வசந்தா இசையில் வழக்கம்போல் பாடல்களில் வசந்தம். பின்னணி இசையும் கதையின் விறுவிறுப்புக்கு உதவியுள்ளது.
கதை மீதுள்ள நம்பிக்கையில் பெரிய நட்சத்திர பட்டாளம் இல்லாமலேயே வெற்றியை வசப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் செல்வகுமார்.
கிளைமாக்ஸ் காட்சி கண்கலங்க வைத்தாலும் அதற்கு முன் வரும் காட்சிகள் சற்று அலுப்பை வரவழைப்பது பலகீனம்.