பொம்மை நாயகி : சினிமா விமர்சனம்


பொம்மை நாயகி : சினிமா விமர்சனம்
x
நடிகர்: யோகிபாபு நடிகை: சுபத்ரா  டைரக்ஷன்: ஷான் இசை: சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு : அதிசயராஜ்

டீக்கடையில் வேலை பார்க்கும் யோகிபாபுவுக்கு மனைவி சுபத்ரா மற்றும் ஒன்பது வயது மகள். கோவில் திருவிழாவில் மகள் காணாமல் போக பதறுகிறார். சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். அவர்களிடம் இருந்து மகளை காப்பாற்றும் யோகிபாபு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க போராடுகிறார்.

ஆனால் அவரிடம் புகாரை வாங்க போலீஸ் மறுக்கிறது. பின்னர் நீதிமன்றத்தை நாடுகிறார். அங்கு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கிறது. ஆனால் அதன்பிறகு யோகிபாவுக்கு சிக்கல் வருகிறது. தண்டனை பெற்றவர்கள் யோகிபாபுவை பழிவாங்க துடிக்கிறார்கள். அந்த பிரச்சினையில் இருந்து மீள யோகிபாபு எடுத்த முடிவு என்ன என்பதே கதை.

யோகிபாபுவுக்கு முழு கதையையும் தாங்கும் கனமான கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்துள்ளார். ஏழ்மை, பெண் குழந்தை மீது பாசம், அவளை காமுகர்கள் குதறிய தவிப்பு, இயலாமை, சோகம் என அத்தனை உணர்வுகளையும் அபாரமாக வெளிப்படுத்தி இருக்கிறார். பிற்பகுதி கதையில் வெகுண்டெழுந்து முற்றிலும் வேறுபட்டவராக இன்னொரு முகம் காட்டுகிறார்.

யோகிபாபுவின் மனைவியாக வரும் சுபத்ரா கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார். மகளாக வரும் சிறுமி ஸ்ரீமதி சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். இவருக்கும் யோகி பாபுவுக்குமான பாச பிணைப்பு ரசிக்க வைக்கிறது. யோகிபாபுவின் தந்தையாக வரும் ஜி.எம்.குமார், அண்ணனாக வரும் அருள்தாஸ், நண்பனாக வரும் ஜெயச்சந்திரன், ரமணியம்மாள் அனைவரும் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.

பிற்பகுதி கதையில் தொய்வு இருப்பதை தவிர்த்து இருந்தால் படம் இன்னும் பேசப்பட்டு இருக்கும்.

சிறார் மீதான பாலியல் அத்துமீறல்களையும் பாதிக்கப்படுவோருக்கு வரும் பிரச்சினைகளையும் அழுத்தமான கதைகளத்தில் சமூக அக்கறையோடு காட்சிப்படுத்தி கவனிக்க வைக்கிறார் இயக்குனர் ஷான். அதிசயராஜின் கேமரா கடலூர் பகுதியை அழகாக காட்சிப்படுத்தி கண்முன் நிறுத்துகிறது. சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கின்றன.


Next Story