ஐமா: சினிமா விமர்சனம்


ஐமா: சினிமா விமர்சனம்
x
நடிகர்: யூனஸ் நடிகை: எல்வின் ஜுலியட்  டைரக்ஷன்: ராகுல் கிருஷ்ணா இசை: ராகுல் ஒளிப்பதிவு : விஷ்ணு கண்ணன்

ஒரு அறையில் மாட்டிக்கொண்ட இரண்டு நபர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த கதை...

அம்மாவை காப்பாற்ற தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்கிறார் நாயகன் யூனஸ். அண்ணன் மறைவால் வாழபிடிக்காமல் தற்கொலைக்கு முயற்சிக்கிறார் நாயகி எல்வின் ஜுலியட்.

இருவரையும் மர்ம நபர்கள் கடத்தி பாழடைந்த பங்களாவில் அடைக்கின்றனர். அங்கிருந்து தப்பித்து செல்வதற்கு முயற்சிக்கிறார்கள்.

அப்போது அவர்கள் உடலில் விஷம் செலுத்தப்பட்டு இருப்பதையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் தப்பிக்கவில்லை என்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதையும் அறிந்து மேலும் பதட்டமடைகிறார்கள்.

உயிரைக் காப்பாற்றி கொள்வதற்கு அவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது.

அதை பயன்படுத்தி தப்பினார்களா? அவர்கள் ஏன் கடத்தப்பட்டார்கள்? கடத்தல்காரர் யார்? என்பது மீதி கதை.

சினிமா ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களுடன் இருக்கிறார் நாயகன் யூனஸ். பதற்றமான நேரத்திலும் நாயகியிடம் ஆடிப்பாடி தன்னுடைய கதாபாத்திரத்தை கவனிக்க வைக்கிறார்.

பார்க்க பார்க்க பிடித்துப்போகும் ரகம் நாயகி எல்வின் ஜுலியட். ஆரம்பத்தில் நாயகனிடம் எரிந்து விழுபவர், நாயகனுடன் ஸ்பரிசம் ஏற்பட்டதும் நெருக்கமாகி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். முத்தக் காட்சியிலும் தாராளம் காட்டி உள்ளார்.

வில்லனாக வரும் சண்முகம் ராமசாமியை புதுமுக நடிகர் என்று சொன்னால்தான் தெரியும் என்கிற அளவுக்கு சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். உடல் மொழியிலும் அதிரடி சண்டையிலும் மிரட்டி அசத்தியுள்ளார்.

அகில் பிரபாகரன், ஷாஜி, ஷீரா, மேகா மாலு, மனோகரன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நியாயம் செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் விஷ்ணு கண்ணன் தன்னுடைய வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார். இருளில் படம் பிடிப்பது சற்றே சவாலாக இருந்தாலும் அதை நேர்த்தியாக செய்துள்ளார்.

ராகுல் இசை கதையின் தன்மைக்கு ஏற்ப பயணித்து பலம் சேர்த்துள்ளது. பாடல்கள் அனைத்தும் ஓ.கே.ரகம்.

படத்தின் ஆரம்பத்திலேயே நாயகனையும் நாயகியையும் கட்டிப்போட்டு ரசிகர்களையும் கட்டுப்போடுகிறார் இயக்குனர் ராகுல் கிருஷ்ணா. பூட்டிய அறையில் பெரும்பாலான காட்சிகள் நகர்ந்தாலும் அடுத்தடுத்து யூகிக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமாக கதை சொல்ல முயற்சித்துள்ளார்.

காட்சிகளில் இன்னும் கூட விறுவிறுப்பு சேர்த்திருக்கலாம்.


Next Story