கோர்ட்டில் வழக்கு: தனுஷ் பட சர்ச்சை பாடல் வரி நீக்கம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்ற பாடல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்ப்பு கிளம்பியது. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. எதிர்ப்பு காரணமாக பாடல் வரி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘‘கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளில் இருந்து நீங்கள் அளித்து வரும் ஆதரவு உத்வேகம் அளிக்கிறது. என் மீது காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும்தான் சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுகொடுக்கிறது. பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான். என் நிலத்தோடும் என் இரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிப்படுத்தினேன். பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டாலென்ன. பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிட போகிறதா என்ன? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள். இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான். கர்ணன் ஆடுவான்’' இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story