டப்பிங் அலுவலகத்தை திறக்க கோரி வழக்கு - நடிகர் ராதாரவி பேட்டி
சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தை திறக்க கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய இருக்கிறோம் என்கிறார் நடிகர் ராதாரவி.
சென்னை சாலிகிராமம் விஜயராகவபுரத்தில் உள்ள சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்துள்ளனர். இந்த கட்டிடத்தை கட்ட மாநகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என்று சீல் வைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி கூறும்போது, "டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிட விதிமீறல் புகார் எழுந்தபோது நான் பொறுப்பில் இல்லை. அப்போது பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் இப்போது இல்லை.
கட்டிடத்துக்கு எனது பெயரை வைக்க முடிவு செய்தபோது வேண்டாம் என்று மறுத்தேன். டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிடம் கட்டியதை எதிர்த்து வழக்கு போட்டதும் வக்கீல் மூலம் கோர்ட்டில் முறையான விளக்கம் அளித்தோம்.
மாநகராட்சி சார்பில் ஒரு மாதத்துக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நோட்டீஸ் வந்து இருக்கலாம். வராமலும் இருக்கலாம். படப்பிடிப்பு உள்ளிட்ட வேறு பணிகளில் நான் தீவிரமாக இருந்ததால் நோட்டீஸ் என் கவனத்துக்கு வரவில்லை.
டப்பிங் அலுலகம் வேறு இடத்தில் தொடர்ந்து செயல்படும். சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தை திறக்க கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய இருக்கிறோம். டப்பிங் சங்கத்துக்கு என்னை தொடர்ந்து தலைவராக தேர்வு செய்து வருவதால் சிலருக்கு பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும் இருக்கிறது. அதன் விளைவாகவே இப்படி நடக்கின்றன'' என்றார்.