வங்காள திரைப்பட இளம் நடிகை ஆய்ண்டிரிலா சர்மா மறைவு; மம்தா பானர்ஜி இரங்கல்
வங்காள திரைப்பட இளம் நடிகை ஆய்ண்டிரிலா சர்மா 24 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து உள்ளார்.
கொல்கத்தா,
வங்காள திரைப்பட நடிகை ஆய்ண்டிரிலா சர்மா பல முறை மாரடைப்பு ஏற்பட்டதில் காலமானார். அவருக்கு வயது 24. மேற்கு வங்காள அரசு அவருக்கு இந்த ஆண்டிற்கான டெலி சம்மான் விருது வழங்கி இருந்தது.
இந்நிலையில், அவரது மறைவுக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்து உள்ளார். அந்த செய்தியில், பிரபல நடிகை ஆய்ண்டிரிலா சர்மா திடீர் மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்து உள்ளேன்.
அவர் ஹவுரா நகரில் இன்று காலமானார். வளர்ந்து வந்த இளம் நடிகையான அவருக்கு 24 வயதே ஆகிறது என்று தெரிவித்து உள்ளார். கொடூர வியாதிக்கு எதிராக, உறுதியுடன் அவர் போராடிய விதம் தொடர்ந்து ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும். அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு என அவர் தெரிவித்து உள்ளார்.
நடிகை ஆய்ண்டிரிலா சர்மா ஜுமூர், மகாபீத் தாராபீத், ஜீவன் ஜோதி, ஜீவன் கதா, ஜியோன்காதி உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களிலும், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து உள்ளார்.