ஆஸ்கர் கிடைக்குமா? - சிறந்த பாடல் பிரிவில் இறுதி பட்டியலுக்குள் நுழைந்த ஆர்.ஆர்.ஆரின் "நாட்டு நாட்டு"...!
ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரைப் பட்டியலில் சிறந்த பாடலுக்கான பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றுள்ளது.
2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பாடல் உள்பட பல்வேறு பிரிவுகளில் தேர்வுக்கு அனுப்பப்பட்ட படங்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தத் தெரிவுப் பட்டியலில் சிறந்த வெளிநாட்டு மொழிப் படம் பிரிவில் இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக அனுப்பப்பட்ட குஜராத்தித் திரைப்படமான செல்லோ ஷோ இடம்பெற்றிருந்தது. மேலும், ஆல் தட் ப்ரீத்ஸ், தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படங்களும், தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்ட ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் 'நாட்டுக் குத்து' பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
இதுதவிர, சிறந்த சர்வதேச வெளிநாட்டு படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகர் உட்பட பல்வேறு பிரிவுகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, ஜனவரி 12 முதல் 17 வரை இறுதிப் பரிந்துரைகளுக்கான பணிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் இடம்பெற்றுள்ளது. அதேபோல ஆவணப்பட பிரிவில் எலிபண்ட் விஸ்பரர்ஸ் படமும் இறுதிப் பரிந்துரைக்கு தேர்வாகியுள்ளது.
முன்னதாக, சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.