உண்மையை எடுத்துச்சொல்வேன் - போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் குறித்து ஆடியோ வெளியிட்ட அமீர்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை சம்மனை எதிர்கொண்டுள்ள டைரக்டர் அமீர் ஆடியோ வெளியிட்டுள்ளர்.
சென்னை,
2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9ம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.
இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படங்களை தயாரித்ததும் தெரியவந்துள்ளது. டைரக்டர் அமீர் இயக்கத்தில் வெளியான இறைவன் மிகப்பெரியவன் என்ற திரைப்படத்தையும் ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார்.
டைரக்டர் அமீர் கைதான ஜாபர் சாதிக்கின் நண்பர் என்பதும் இவரும் சேர்ந்து காபி ஷாப் ஒன்றை இணைந்து தொடங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஜாபர் சாதிக் உடன் டைரக்டர் அமீருக்கு உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தலாம் என தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில் விசாரணைக்கு வரும் 2ம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி அமீருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அளித்துள்ள சம்மனை எதிர்கொள்ள தயார் என்று டைரக்டர் அமீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆடியோ வெளியிட்டுள்ள அமீர்,
ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். கொஞ்சமும் தயக்கமில்லாமல், என் தரப்பிலிருக்கும் உண்மையையும், நியாயத்தையும் எடுத்து சொல்வேன். 100 சதவிகிதம் வெற்றியோடு இறைவன் அருளால் வருவேன்'
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.