'பொன்னியின் செல்வன்' படத்தில் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்? - பட அதிபர் கேயார் பேட்டி


பொன்னியின் செல்வன் படத்தில் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்? - பட அதிபர் கேயார் பேட்டி
x

‘பொன்னியின் செல்வன்' படத்தில் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்? என்று பட அதிபர் கேயார் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

'விக்ரம்' படத்தை போலவே 'பொன்னியின் செல்வன்' படமும் முதல் வாரத்தில் நல்ல லாபத்தை பார்த்து வருகிறது. ஆனால் 'விக்ரம்' படத்தை விட 'பொன்னியின் செல்வன்' படத்துக்கு மிகப்பெரிய அளவில் விளம்பரம் இருந்ததால், அதன் தாக்கம் பெரிதாக இருக்கிறது. 'விக்ரம்' படம் வெளிவந்து, ரசிகர்கள் அந்த படத்தை பார்த்த பிறகு தான் 'ஹிட்' ஆனது. ஆனால் 'பொன்னியின் செல்வன்' படத்துக்கு தொடக்கத்திலேயே வெற்றி காத்திருந்தது. இந்த வெற்றிக்கு 50 சதவீத காரணம் அமரர் கல்கி தான். அந்த புகழ் அவரையே சாரும். 20 சதவீதம் ரஜினிகாந்த்-கமல்ஹாசனை சென்றடையும். ஏனெனில் 'பொன்னியின் செல்வன்' ஆடியோ-டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு இருவரும் வந்து இந்த படத்தை பற்றி பேசியது, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியது. புத்தகம் படிக்காதவர்களுக்கும் இவர்களின் பேச்சு ஆர்வத்தை தூண்டியது. ஆச்சரியத்தை அளித்தது. இதனுடன் சமூக வலைதளங்களில் கொடுக்கப்பட்ட விளம்பரங்களும் முக்கிய காரணம். 10 சதவீதம் வெற்றி விடுமுறை நாட்கள் தந்தவை. மீதமுள்ள 20 சதவீதம் வெற்றி தான் டைரக்டர்கள், நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினரை சேரும். இந்துக்களுக்கு எப்படி ராமாயணம் இருக்கிறதோ, இனி தமிழர்களுக்கு பொன்னியின் செல்வன் இருக்க போகிறது. இதற்கு காரணம் அமரர் கல்கியின் எழுத்துகள் தான். அவரது 5.5 ஆண்டு கால உழைப்பு அளப்பரியது. எப்படி இந்த புத்தகத்தை படிக்காமல் போனோம் என்று அனைவருமே தற்போது வருத்தப்படுகிறார்கள். எனவே இந்த வெற்றியின் பெரும்பங்கு கல்கிக்கு தான். கல்கி உயிருடன் இருந்தால் காலில் விழுந்திருப்பேன் என்று ரஜினிகாந்தே கூறியிருந்தார். பலருக்கு கைகூடாமல் போன விஷயத்தை வைராக்கியமாக இருந்து சாதித்து காட்டிய மணிரத்னம், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு பாராட்டுகள். இந்த படத்துக்கு ரூ.250 கோடிக்கு மேல் செலவாகி இருக்கிறது. ஆனால் இந்த படத்தை 3 பாகமாக உருவாக்கி இருக்கலாம். ஏனெனில் அத்தனை கதாபாத்திரங்களும் முக்கியமானவை. இப்போது 2 பாகங்கள் மட்டுமே என்பதால் கதாபாத்திரங்கள் சற்று தொய்வும், சந்தேகமும் ஏற்படுகிறது. எனக்கே படத்தின் கதாபாத்திரங்களில் சில இடங்களில் திருப்தி இல்லை. ஆனால் அதற்கும், படத்தின் வருமானத்துக்கும் சம்பந்தம் இல்லை. இப்போது படம் பார்க்கவில்லை என்றால் பாவம் என்று கூறும் நிலைமை இருக்கிறது. ஆனால் அமரர் கல்கியும், ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கூட்டணியும் தான் இத்தகைய வெற்றிக்கு முக்கிய காரணம். இந்த படத்தில் அனைத்து சுமைகளையும் டைரக்டர் மணிரத்னமே தாங்கிக்கொண்டு விட்டார். ஆனாலும் மணிரத்னம் மேல் எனக்கு ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால், கல்கியின் ஒரு மாபெரும் காவியத்தை அவர் படமாக்கி இருக்கிறார். ஆனால் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தப்படவில்லை. படத்தின் முதல் காட்சியில் கூட கல்கி படத்தை காட்டவில்லை. கல்கி படத்துடன் கமல்ஹாசன் குரல் ஒலித்திருந்தால் இன்னும் இந்த படம் சிறப்படைந்திருக்கும். ஆனால் இதை செய்யவில்லை. எனவே 2-ம் பாகத்திலாவது இதனை செய்யவேண்டும். ஏனெனில் இந்த படத்துக்கு முக்கிய கதாநாயகனே கல்கி தான். அவருக்கு நன்றி செலுத்தியிருக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு சன்மானம் வழங்கி கவுரவித்திருக்க வேண்டும். இன்னும் நேரம் இருக்கிறது. இதை செய்தால் தான் நல்லது. மணிரத்னம் கனவை நிறைவேற்ற லைகா நிறுவனம் இருந்தது. கல்கியின் கனவை கவுரவப்படுத்துவது மணிரத்னம் உள்பட படக்குழுவினரின் கடமையும் கூட.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story