நான் இயக்கியதால் தான் விஜய் கமர்ஷியல் ஹீரோவானார் - எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு


நான் இயக்கியதால் தான் விஜய் கமர்ஷியல் ஹீரோவானார் -  எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு
x

தொடக்கத்தில் நல்ல இயக்குநர்கள் யாரும் விஜய்யை வைத்து படம் எடுக்க முன்வரவில்லை என இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

சென்னை,

இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் தங்கர்பச்சான், கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கௌதம் வாசுதேவ் மேனன், லோகேஷ் கணகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர்,

நான் முதல் முதலில் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தபோது, பாரதிராஜாவிடம் சென்று 'உங்களிடம் நான் உதவி இயக்குநராக சேர வேண்டும்' என்று வாய்ப்பு கேட்டேன். ஆனால் அவர் 'நாம் நண்பர்களாக இருக்கலாம்' என்று கூறிவிட்டார். வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு நான் இயக்குநராக மாறினேன். பல படங்கள் எடுத்தேன். அப்போது விஜய்யை படம் நடிக்க வைக்க நினைத்தேன். அதற்காக பெரிய இயக்குநர்களிடம் விஜய்யின் ஆல்பத்துடன் சென்றேன்.

விஜய்யை நடிக்க வைக்க, முதலில் இயக்குநர் பாரதிராஜாவிடம் தான் சென்று கேட்டேன். அவர் அப்போதும் வாய்ப்பு கொடுக்கவில்லை. என் வாழ்வில் நான் பாரதிராஜாவிடம் 'நீயே பெரிய இயக்குநர்' என்று சொல்லிவிட்டார். 'நான் உங்களிடம் உதவி இயக்குநராக வேண்டும்' என்றும், 'விஜய்யை உங்கள் இயக்கத்தில் நடிக்க வைக்க வேண்டும்' என்றும் இரண்டு விஷயங்களை கேட்டிருக்கிறேன். இரண்டுமே கிடைக்கவில்லை.

ஆனால் இந்த படத்தில் (கருமேகங்கள் கலைகின்றன படத்தில்) இயக்குநர் தங்கர்பச்சான் என்னையும், பாரதிராஜாவையும் சேர்ந்து நடிக்க வைத்துவிட்டார். இதேபோன்று இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் விஜய்யை வைத்து நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டேன். அவரும் அப்போது விஜய்யை வைத்து படம் எடுக்கவில்லை" என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

தொடர்ந்து பேசிய அவர் தொடக்கத்தில் நல்ல இயக்குநர்கள் யாரும் விஜய்யை வைத்து படம் எடுக்க முன்வரவில்லை. ஒருவேளை அதுவும் நல்லதுக்குதான். ஏன் என்றால் விஜய் என் கையில் வந்ததால் தான் கமர்ஷியல் ஹீரோவாக மாறியுள்ளார். அதனால் தான் கடவுள் அப்படி செய்து இருப்பார் என்றார்.


Next Story