வெற்றி நடிக்கும் 'ஆலன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா


வெற்றி நடிக்கும் ஆலன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
x
தினத்தந்தி 6 Oct 2024 8:36 PM IST (Updated: 6 Oct 2024 9:06 PM IST)
t-max-icont-min-icon

'ஆலன்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

சென்னை,

இயக்குநர் சிவா .ஆர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆலன்' திரைப்படத்தில் வெற்றி, மதுரா, விவேக் பிரசன்னா, ஹரிஷ் பெராடி, 'அருவி' மதன் குமார், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். கே. உதயகுமார் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை காசி விஸ்வநாத் மேற்கொண்டிருக்கிறார். ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 3 S பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சிவா. ஆர் தயாரித்திருக்கிறார். கவிஞர் மனுஷ்யபுத்திரன், கேபிள் சங்கர் ஆகியோரும் இந்த திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் 'எட்டு தோட்டாக்கள்' வெற்றி கதையின் நாயகனாகவும், நாயகிகளாக ஜெர்மன் மதுரா மற்றும் அனு சித்தாராவும் நடித்திருக்கிறார்கள். ஆலன் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை தேடல்... மற்றும் ஓர் அழுத்தமான காதல் களம் என்று படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.

'ஆலன்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் 'ஆலன்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளர் டி. சிவா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், தயாரிப்பாளர் டி. சிவா, இயக்குநர் கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் வெற்றி பேசுகையில், '' தொடர்ந்து திரில்லர் திரைப்படங்களை தான் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு காதல் படத்தில் நடிப்போம் என்று யோசித்து கொண்டிருக்கும்போது.. சிவா சார் இப்படத்தின் திரைக்கதையை என்னிடம் கொடுத்தார். படித்தவுடன் இரண்டு விசயங்கள் தான் எனக்குள் தோன்றியது. இந்தப் படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரிக்க முடியாது. பிரம்மாண்டமாக பெரிய பட்ஜெட்டில் உருவாக்க வேண்டும். அடுத்ததாக இசையமைப்பாளர் திறமையானவராக இருக்க வேண்டும் என நினைத்தேன். காதல் கதை என்பதால் இது முக்கியம் என தயாரிப்பாளிடம் சொன்னேன். அவரே இயக்குநர் என்பதால் அவருடைய கற்பனைக்காக செலவு செய்ய தயாராக இருந்தார். படத்தினை கஷ்டப்பட்டு தான் உருவாக்கியிருக்கிறோம். படத்தில் நடித்த சக கலைஞர் அனைவரும் நன்றாக தங்களுடைய உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா சிறந்த இசையை வழங்கி இருக்கிறார். இது போன்ற புதிய முயற்சிகளுக்கு ஆதரவு அளியுங்கள்'' என்றார்.


Next Story