மக்களை கட்டிபோட்ட சினிமா கொட்டகை: கடலூர் நியூ சினிமா
கடலூர் மாநகர மக்களின் கனவு அரங்கமாக 'நியூ சினிமா தியேட்டர்' திகழ்ந்து வருகிறது. 85 ஆண்டுகளைக் கடந்தும் சினிமா ரசிகர்களுக்கு அது விருந்து படைத்துக்கொண்டு இருக்கிறது.
1938-ம் ஆண்டு கடலூர் நகரின் மையப் பகுதியில், கெடிலம் ஆற்றின் கரையில் ஸ்ரீதரன் டாக்கீஸ் என்ற பெயரில் ஒரு திரையரங்கம் கட்டப்பட்டது.
கடலூரில் அப்போதைய நகராட்சி தலைவராக இருந்த தங்கராஜ் முதலியார்தான் அதன் உரிமையாளர்
தென்னாற்காடு மாவட்டத்திற்கு மட்டும் அல்லாது, புதுச்சேரி மாநிலத்திற்கும் அது முதல் திரையரங்கமாகத் திகழ்ந்தது.
தொடக்க காலத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் போன்ற பழம்பெரும் நடிகர்கள் நடித்த படங்கள் திரையிடப்பட்டு வந்தன. அதில் பெரும்பாலான படங்கள் வெள்ளி விழா கண்டன.
1953-ம் ஆண்டு கே.பி.சுந்தராம்பாள் நடித்த அவ்வையார் படம் அங்கு வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர் நாடகங்களில் நடித்த போதும் சரி, திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதும் சரி, அடிக்கடி தங்கராஜ் முதலியார் வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அவ்வாறு ஒரு முறை கடலூரில் உள்ள தங்கராஜ் முதலியார் வீட்டில் கே.பி.சுந்தராம்பாளுக்கு தடபுடலாக விருந்து அளிக்கப்பட்டது. விருந்து முடிந்ததும், அவருக்கு தாம்பூலமாக வெற்றிலையும், ஆரஞ்சு பழங்களையும் தங்கராஜ் முதலியார் கொடுத்தார். அதை சுவைத்துச் சாப்பிட்ட கே.பி.சுந்தராம்பாள், வெற்றிலையும், ஆரஞ்சும் சுவை மிகுந்து இருப்பதாகச் சொன்னார்.
அதனால் கே.பி.சுந்தராம்பாளை பார்க்க சென்னை செல்லும் போதெல்லாம் தங்கராஜ் முதலியார், ஆரஞ்சு பழங்களும், கும்பகோணம் வெற்றிலையும் வாங்கிச் செல்லத் தவறுவது இல்லையாம்.
1954-ம் ஆண்டு வெளிவந்த தூக்கு தூக்கி திரைப்படத்தில் சிவாஜி கணேசன், லலிதா, பத்மினி, ராகினி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தைப் பார்க்கத் தியேட்டரில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது. அப்போது தியேட்டரின் முகப்பே தெரியாத அளவுக்கு 60 அடி உயரத்திற்கு பிரமாண்டமான கட்-அவுட் வைக்கப்பட்டது.
1961-ம் ஆண்டு சிவாஜி கணேசன், சாவித்திரி நடிப்பில் வெளிவந்த பாசமலர் திரைப்படம் திரையிட்ட முதல் 3 நாட்களுக்கு தியேட்டரில் கூட்டமே கிடையாது. அதன் பிறகுதான் படத்தின் கதையை அறிந்து, மக்கள் கூட்டம் கூடியது. தொடர்ந்து 25 வாரம் ஓடியது.
காலப்போக்கில் ஸ்ரீதரன் டாக்கீஸ் என்ற பெயர் 'நியூ சினிமா' என மாற்றப்பட்டு, தியேட்டர் புதுப்பிக்கப்பட்டது.
பிறமொழிப் படங்களை வெளியிடத் தயங்கிய காலத்தில், நியூ சினிமாவில் பல்வேறு பிறமொழிப் படங்கள் குறிப்பாக அமிதாப்பச்சன் நடித்த படங்கள் திரையிடப்பட்டன.
எம்.ஜி.ஆரின் முதல் படமான சதிலீலாவதியும், கடைசிப் படமாக 1978-ம் ஆண்டு வெளியான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனும் இங்குதான் திரையிடப்பட்டன.
1964-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி எம்.ஜி.ஆர். நடித்த படகோட்டி வெளியிடப்பட்டது. கடலூர் மக்களுக்கு மீன்பிடி தொழிலே பிரதானம் என்பதாலும், படகோட்டி படத்தில் மீனவர்களின் வாழ்க்கை முறை சித்தரிக்கப்பட்டு இருந்ததாலும், அந்தப்படத்தைப் பார்ப்பதற்காக சுற்றியுள்ள மீனவக் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இரவு பகல் பாராமல் தியேட்டர் முன்பு காத்துக் கிடந்தனர். அவர்களுக்காக தியேட்டர் நிர்வாகம் சார்பில் 3 நாட்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
1980-ம் ஆண்டு விஜயகாந்தின் தூரத்து இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு கடலூர் செல்லங்குப்பத்தில் 2 மாதங்களுக்கும் மேலாக நடந்தது. அப்போது விஜயகாந்த், தங்கராஜ் முதலியாரின் பிருந்தாவனம் ஓட்டலில் 2 மாதங்கள் தங்கியிருந்தார். அந்த சமயங்களில் நியூ சினிமா தியேட்டருக்கு அடிக்கடி வந்து படம் பார்த்ததுடன், தங்கராஜ் முதலியாரின் குடும்ப நண்பராகவும் மாறினார்.
தியேட்டர் உரிமையாளர் தங்கராஜ் முதலியார் 3 முறை கடலூர் நகராட்சி தலைவராக இருந்தவர். பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.
அவரது மறைவுக்குப் பிறகு தியேட்டர் நிர்வாகத்தை அவருடைய மகன் முத்தையா நிர்வகித்து வந்தார். தற்போது முத்தையாவின் மகள் பத்மபிரியா நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார்.
1938-ம் ஆண்டில் இருந்து 2000 வரை பல வெள்ளிவிழாப் படங்களைக் கொடுத்த நியூ சினிமா தியேட்டர், அதன் பிறகு சரிவைத் சந்தித்தது. தியேட்டரை மூடிவிடலாம் என்ற முடிவுக்கு நிர்வாகம் வந்தது.
2002-ம் ஆண்டு ஏவி.எம். தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி படத்துடன் தியேட்டரை மூட நினைத்தார்கள். ஆனால் அந்தப் படம் மாபெரும் வெற்றியை பெற்று, வசூலை அள்ளிக் கொடுத்தது. அதனால் தியேட்டரை மூடும் முடிவை கைவிட்டனர்.
சென்னை ஸ்டூடியோவில் ஜெமினி படத்தின் வெற்றி விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற, நியூ சினிமா முத்தையாவின் மருமகன் பிரபுவுக்கு நடிகர் கமல்ஹாசன் நினைவுப் பரிசு வழங்கினார்.
அடுத்தடுத்து தியேட்டரில் சில தொழில்நுட்ப மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதாலும், படங்களின் வினியோக உரிமையை வாங்குவதில் தனித்துவமாக செயல்பட்டதாலும் நியூ சினிமா திரையரங்கம் மீண்டும் வளர்ச்சியை நோக்கிப் பயணித்து வருகிறது. கடலூர் மக்களின் மனதைக் கவர்ந்த திரையரங்கமாக நியூ சினிமா இன்றும் திகழ்கிறது.