தமிழ்ப் பெயர்வைக்க தந்திரம் செய்தார்கள்


தமிழ்ப் பெயர்வைக்க தந்திரம் செய்தார்கள்
x

சுதந்திரத்துக்கு முன்பு, பல ஊர்களில் கட்டப்பட்ட தியேட்டர்களின் பெயர்கள் பெரும்பாலும் சென்டிரல், இம்பீரியல், ராயல், பாப்புலர், பேலஸ், சிட்டி சினிமா, நியூ சினிமா, பாரடைஸ், காசினோ, ரீகல், மெரிடியன் என்று ஆங்கிலப் பெயர்களையே சுமந்து கொண்டிருக்கும்.

அதற்கு ஆங்கில மொழியின் தாக்கம் அல்லது மோகம் என்றுகூட நாம் நினைக்கக்கூடும். ஆனால் உண்மை அதுவல்ல. ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் மட்டுமே அன்று எளிதாக திரையரங்குகளுக்கு உரிமம் கிடைத்து இருக்கிறது. ஆங்கிலேய அதிகாரிகள் அதில் உறுதிபட இருந்திருக்கிறார்கள்.

அதேவேளையில் சிந்தாமணி திரைப்படம் மூலம் கிடைத்த லாபத் தொகையைக் கொண்டு கட்டிய திரை அரங்கிற்கு 'சிந்தாமணி' என்று தமிழ்ப் பெயரை வைக்க வேண்டும் என்பதில் அதன் உரிமையாளர்கள் உறுதியாக இருந்தனர்.

விரும்பியபடி பெயரும் சூட்ட வேண்டும், தடங்கல் இல்லாமல் திரையரங்கிற்கு அனுமதியும் கிடைக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்? யோசித்தார்கள். ஒரு தந்திரம் செய்தார்கள். புகழுக்கு மயங்காதவர் புவியில் யார்தான் உண்டு? அதற்கு ஆண்டவனே விதிவிலக்கு இல்லாதபோது, ஆங்கிலேயர்கள் எம்மாத்திரம்? மதுரை மாவட்ட ஆங்கிலேய கலெக்டராக ஜே.ஆர். பெட் என்பவர் இருந்தார். அவரை நேரில் போய் திரையரங்க உரிமையாளர்கள் சந்தித்தார்கள். நிலைமையை விளக்கினார்கள்.

(1939-ம் ஆண்டு) மே மாதம் 13-ந்தேதி திறப்புவிழாவிற்கு நாள் குறித்து இருக்கிறோம். நீங்கள்தான் வந்து சிந்தாமணி திரையரங்கை உங்கள் திருக்கரத்தால் திறந்துவைக்க வேண்டும் என்று ஒரு போடு போட்டார்கள். திரையரங்கிற்கு பெயர் தமிழா? ஆங்கிலமா? என்ற பிரச்சினை அப்படியே மூழ்கிப்போனது. காரணம் அவரை அல்லவா கவுரவப்படுத்தப் போகிறார்கள்? உடனே அனுமதியும் கிடைத்தது. குறிப்பிட்ட நாளில் ஆங்கிலேய கலெக்டரே வந்து திரையரங்கை திறந்தும் வைத்துவிட்டார்.

அதன்மூலம் தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்ட திரையரங்கம் என்ற பெருமை சிந்தாமணிக்கு கிடைத்தது.

அந்தத் தியேட்டர் உரிமையாளர் ஒருவரின் வாரிசுதாரரான விக்ரம் மல்லி, நம்மிடம் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இதில் இன்னொரு கூடுதல் தகவல் என்னவென்றால், அதே ஆண்டில் மதுரையில் மற்றொரு பிரபல தியேட்டரும் திறக்கப்பட்டது. அதன் பெயர்தான், சென்டிரல்!


Next Story