ராஜ்கமல்-லதா ராவ் தம்பதி வீட்டில் நடந்த திருட்டு - 2 பேர் கைது

திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
சென்னை,
சின்னத்திரை நடன நிகழ்ச்சியில் தொடங்கி, பல நாடகங்களில் நடித்து கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் தம்பதியாக வலம் வருபவர்கள் ராஜ்கமல்-லதா ராவ் தம்பதி. இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில், சென்னை, மதுரவாயில் பகுதியில் வீடு ஒன்றை வாங்கி படப்பிடிப்புக்காக இவர்கள் உபயோகித்து வரும் நிலையில், அண்மையில் இவர்களது வீட்டின் பின் பக்க பூட்டை உடைத்து 65 இன்ச் விலை உயர்ந்த தொலைக்காட்சியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். அதோடு அவர்களின் பக்கத்து வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரும் திருடப்பட்டது.
இதனையடுத்து ராஜ்கமல்-லதா ராவ் தம்பதி மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மதுரவாயல் காவல் துறையினர் விசாரணை நடத்திய நிலையில், கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த காஜா முகைதீன் மற்றும் திருவொற்றியூரைச் சேர்ந்த அமீனுதீன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட டி.வி. மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.