பேக்கரி கடைக்காரரின் பழிவாங்கும் செயல் 26 நாட்கள் துபாய் சிறையில் கிடந்த நடிகை
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போதைப்பொருள் வைத்திருப்பது கடுமையான குற்றமாகும். ஆயுள் தண்டனை மற்றும் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
மும்பை
பிரபல இந்தி நடிகை கிரிஷான் பெரீரா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லும் போது கையில் வைத்திருந்த பரிசு கோப்பையில் போதைப்பொருள் வைத்து இருந்ததாக அங்குள்ள போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். இதுகுறித்து மும்பை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
கிரிஷான் பெரீராவை சிக்க வைக்க சதி திட்டம் நடந்துள்ளதாக அவரது தாய் பிரமிளா மும்பை போலீசில் புகார் செய்தார். போலீசாரும் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பேக்கரி கடை வைத்துள்ள அந்தோணி பால், ரவி போட்டே ஆகியோர் கூட்டுச்சதி செய்து, கிரிஷான் பெரீராவை போதைப் பொருள் வழக்கில் போலீசாரிடம் சிக்க வைத்தது தெரிய வந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து துபாய் சிறையில் இருந்து கிரிஷான் பெரீரா 26 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
சிறையில் இருந்து வெளியே வந்த அவர் கூறுகையில்,
''சிறையில் 26 நாட்கள் நரக வேதனை அனுபவித்தேன். துணிக்கு போடும் சோப்பை குளிக்க பயன்படுத்தினேன். குளியலறை தண்ணீரை பயன்படுத்தி காபி தயாரித்து குடித்தேன். இப்படி பல கஷ்டங்களை அனுபவித்து விட்டேன். இந்த கஷ்டங்கள் எனது எதிரிகளுக்கு கூட வரக்கூடாது.
என் மீது நம்பிக்கை வைத்திருந்த எனது அம்மா, அப்பா, நண்பர்கள், ஊடகங்கள், காவல்துறை உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு உதவுகின்ற உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய எனது கதையை டுவீட் செய்து மறுபகிர்வு செய்த அனைவருக்கும் நான் என்றென்றும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன்.
நாம் ஒரு பெரிய சக்திவாய்ந்த தேசம். நான் வீட்டிற்கு திரும்ப காத்திருக்க முடியாது. இந்த மோசடியில் சிக்கிய எனது உயிரையும் மற்ற அப்பாவி மக்களின் உயிரையும் காப்பாற்றியதற்கு நன்றி. எப்போதும் நீதி வெல்லட்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு குறித்து போலீசார் கூறும்போது:
கொரோனா ஊரடங்கு காலத்தில்,கிரிஷான் பெரீராவும் அவரது குடும்பத்தினரும் அந்தோணி பால் சகோதரி வசித்த குடியிருப்பு வளாகத்தில் தங்கினர். அந்தோணி தனது சகோதரியின் வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது பிரமிளா வின் நாய் குரைத்துக்கொண்டே அவரை நோக்கி பாய்ந்தது. நாற்காலியை எடுக்க முடியாத ஆண்டனியை பிரமிளா திட்டி நாயை அடித்தார். இதற்கு பழிவாங்கும் நோக்கில் நடிகையை போதை பொருள் வழக்கில் சிக்கவைத்து உள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்டில் ஹாலிவுட் தொடருக்கான ஆடிஷனில் பங்கேற்குமாறு அந்தோணியின் நண்பரான ரவி, நிறுவனத்த்தின் பேரில் நடிகைக்கு மின்னஞ்சல் அனுப்பினார். புறப்படுவதற்கு முந்தைய நாள், நடிகைக்கு போதைப்பொருளை மறைத்து வைத்த்துருந்த கோப்பை வழங்கப்பட்டு உள்ளது. அந்த கோப்பையை விமான நிலையத்திற்கு வருபவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
நடிகையையும் அதை ஏற்றுக்கொண்டு உள்ளார். யாரும் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதற்கிடையில் சோதனையின் போது சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு முன்பும் இதேபோல் 4 பேரை அந்தோணி சிறையில் அடைத்துள்ளதும், அவர்களில் ஒருவர் ஷார்ஜா சிறையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கூறினர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போதைப்பொருள் வைத்திருப்பது கடுமையான குற்றமாகும். ஆயுள் தண்டனை மற்றும் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.