ரசிகையாக இருந்து சூப்பர்ஹீரோ ஆன இமான் வெல்லானி
காமிக்ஸ் கதாபாத்திர ரசிகையாக இருந்து சூப்பர்ஹீரோ ஆகும் காட்சிகளை கொண்ட மிஸ் மார்வெல் நேற்று ரிலீசாகி வரவேற்பை பெற்று உள்ளது.
டொரண்டோ,
சிறு வயதில் புத்தகம் படிப்பவர்களை கவருவதற்காக வண்ண, வண்ண படங்களுடன் காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவரும். அதில், பல சூப்பர் ஹீரோக்கள் மக்களை மற்றும் நகரங்களை காப்பாற்றும் செயலில் ஈடுபடுவார்கள்.
சிறுவர் சிறுமியர் விரும்பி படிக்கும் வகையில் விறுவிறுவென காட்சிகளின் ஓட்டம் இருக்கும். சஸ்பென்ஸ், திரில் நிறைந்த சம்பவங்களும் இடம் பெற்றிருக்கும். இதுபோன்ற காமிக்ஸ் புத்தகங்களில் வரும் சூப்பர் ஹீரோக்களின் தீவிர ரசிகையாக இருந்தவர் இமான் வெல்லானி.
பாகிஸ்தானில் பிறந்தவரான இவர், பின்னர் கனடா நாட்டில் வசித்து வருகிறார். இவரை சூப்பர் ஹீரோ வேடத்தில் நடிக்க அழைத்திருக்கின்றனர். முதலில், இதனை போலியான அழைப்பு என அவர் நினைத்திருக்கிறார். ஆனால், அது உண்மை என தெரிந்ததும் பரவசம் அடைந்துள்ளார்.
எனினும், தொடக்கத்தில் காட்சிகளுக்கு ஏற்ப இவர் சரியாக நடிக்கவில்லை போலும். இதனால் பயந்து போயிருக்கிறார். 2 நாட்கள் கழித்து மற்றொரு அழைப்பு வந்துள்ளது. அப்போது டொரண்டோவில் அவர் இருந்திருக்கிறார்.
அவரை லாஸ் ஏஞ்சல்சுக்கு வரும்படி அழைத்துள்ளனர். உடனடியாக அவரது தந்தையுடன் லாஸ் ஏஞ்சல்சுக்கு சென்றுள்ளார். இது எனது வாழ்வின் சிறந்த பயணம் என குறிப்பிடும் வெல்லானி, சாரா பின் மற்றும் லூயிஸ் டி-எஸ்பொசிட்டோ உள்ளிட்ட திரை பிரபலங்களை பார்த்து பிரமித்து போயிருக்கிறார்.
இதன்பின்னர் கொரோனா பெருந்தொற்று பரவியது. தொடர்ந்து அவருக்கு இ-மெயில் ஒன்று வந்தது. அதில், இன்னும் நடிப்பு பணியில் தொடர்வதற்கான வாய்ப்பு அவருக்கு உறுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஒரு பக்கம் படிப்பு என இருந்த அவருக்கு ஒரு வழியாக ஜூம் செயலி வழியே ஸ்கிரீன் டெஸ்ட் (திரையில் சரியான தோற்றம் வருவதற்கான டெஸ்ட்) எடுக்கப்பட்டது.
இதன்பின்னர் மிஸ் மார்வெல் கதாபாத்திரத்தில் வெல்லானி நடிக்க தொடங்கினார். அதில், அவர் கமலா கானாக வருகிறார். பாகிஸ்தானிய முஸ்லிம் சிறுமியான அவர் ஒரு சூப்பர் ஹீரோவின் ரசிகையாக காட்டப்படுகிறார். ஆனால், பள்ளியில் சரியாக நடந்து கொள்ளவில்லை. வீட்டிலும் அவருக்கு ஒத்து போகவில்லை.
இது எல்லாம் அவருக்கு சூப்பர் பவர் கிடைக்கும் வரையே. ஒரு 16 வயது சிறுமிக்கு சூப்பர் பவர் வருகிறது. அதனை வைத்து கொண்டு அவர் என்ன செய்கிறார் என காட்சிகள் நகர்கின்றன. இந்த அதிரடி, சாகசங்கள் மற்றும் காமெடி காட்சிகள் நிறைந்த தொடரானது நேற்று ரிலீசானது.
இதில், மிஸ் மார்வெல் மற்ற சூப்பர் ஹீரோக்களின் ரசிகையாகவும் இருக்கிறார். இது, மார்வெல் ரசிகர்களின் உண்மையான வாழ்க்கையில் பிரதிபலிக்க கூடிய விசயங்களாக இருக்கும். நம் அனைவருக்கும் சூப்பர் பவர் கிடைத்து விட்டால் எப்படி இருப்போமோ, அதேபோன்று மார்வெல்லும் செயல்படுவார் என வெல்லானி விளக்குகிறார்.
நாங்கள் ஒரு பாகிஸ்தானிய முஸ்லிம் பெண்ணை பற்றிய காட்சிகளை எடுக்கவில்லை. ஆனால், பிற சிறுமிகளை போன்றே கமலா கான் தினமும் எழுந்து, பள்ளிக்கு சென்று, சாப்பிடுபவராக இருப்பார். அவர் மார்வெல் ஆகவும் செயல்படுவார். அதனுடன் இணைந்தே கமலாவை பாகிஸ்தானிய முஸ்லிம் சிறுமியாக சமஅளவில் கலந்து காட்டியுள்ளோம் என கூறியுள்ளார்.