நடிகர் சரத்பாபு மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்!
நடிகர் சரத்பாபு மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரான நடிகர் சரத்பாபு தனது 71-ம் வயதில் உடல்நல குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார்.
'பட்டினப்பிரவேசம்' என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 1977 ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமானவர் நடிகர் சரத் பாபு:
இவர் நிழல் நிஜமாகிறது, வட்டத்துக்குள் சதுரம், முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து போன்ற பல பிரபல திரைப்படங்களிலும் மற்றும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற 200க்கும் மேற்பட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.
கடந்த 50 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் முன்னனி கதாநாயகர்களோடு இணைந்தும் நடித்து வந்துள்ளார். மிக்க அமைதியும் ஆர்பாட்டமில்லாதவராக திரைத்துறையில் வலம்வந்தவர். திரைதுரையை சார்ந்த அனைவராலும் செல்லமாக "ஜெண்டில்மென்" என்று அழைக்கப்பட்டார், அவருடைய மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் தாங்க முடியாத பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.