டிஜிட்டல் தளங்களால் சிறு பட்ஜெட் படங்கள் பாதிப்பு - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
டிஜிட்டல் தளங்களால் சிறு பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படுவதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். தற்போது வத்திக்குச்சி படம் மூலம் பிரபலமான கின்ஸ்லின் இயக்கத்தில் டிரைவர் ஜமுனா என்ற படத்தில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்துள்ள பேட்டியில், "எனது 3 படங்கள் கொரோனா தொற்று காரணமாக டிஜிட்டல் தளங்களில் வெளியானது. கனா படம் வெளியாகி 3 வருடங்களுக்கு பிறகு டிரைவர் ஜமுனா படத்தை தியேட்டர்களில் வெளியிடும் தயாரிப்பாளர் எஸ்.பி.சவுத்ரிக்கு நன்றி. சின்ன பட்ஜெட் படங்களை பார்க்க ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருவது குறைந்துவிட்டது.
அதிலும் டிஜிட்டல் தளங்களின் ஆதிக்கத்திற்கு பிறகு சிறு பட்ஜெட் படங்களை தியேட்டர்களில் சென்று பார்ப்பது இல்லை. இதனால் சிறிய படங்களுக்கு பாதிப்பு உள்ளது. ஆனால் சின்ன பட்ஜெட்டாக இருந்தாலும், ஒரு படம் வித்தியாசமானதாகவும், தரமானதாகவும் இருந்தால் அதற்கான ஆதரவு குறையவில்லை. 'டிரைவர் ஜமுனா' அந்த வகையிலான தரமான படம் என்ற நம்பிக்கை உள்ளது.
எனக்கு கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். இந்த படத்தில் சண்டை மற்றும் சாகச காட்சிகளில் நானே காரை ஓட்டினேன். நான் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க முயற்சி செய்கிறேன் என்று சொல்லாதீர்கள். அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை'' என்றார்.