'புஷ்பா' பட நடிகருடன் இணைந்த செல்வராகவன்
செல்வராகவன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், 2002ம் ஆண்டு வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன', 'இரண்டாம் உலகம்', 'என்ஜிகே', 'நெஞ்சம் மறப்பதில்லை', 'நானே வருவேன்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தில் செல்வராகவன் மும்முரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் 'சாணிக் காயிதம்' படத்திலும் மோகன் ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பகாசூரன் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். தொடர்ந்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'மார்க் ஆண்டனி' படத்திலும் செல்வராவன் நடித்துள்ளார்.
இந்த நிலையில் செல்வராகவன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'புஷ்பா' பட நடிகர் சுனில் மற்றும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடிக்கும் அடுத்த படத்தில் செல்வராகவன் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் ரங்கநாதன் இயக்கவுள்ளார். இதுகுறித்து செல்வராகவன் கூறும்போது, யோகிபாபு மற்றும் புஷ்பா பிரபலம் சுனிலுடன் திரையை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.