"போண்டாமணியை காப்பாத்துங்க .." நண்பருக்காக கதறி அழும் நடிகர் பெஞ்சமின்..!


போண்டாமணியை காப்பாத்துங்க .. நண்பருக்காக கதறி அழும் நடிகர் பெஞ்சமின்..!
x
தினத்தந்தி 21 Sept 2022 12:26 PM IST (Updated: 21 Sept 2022 12:48 PM IST)
t-max-icont-min-icon

உயிருக்கு போராடும் நடிகர் போண்டாமணிக்கு உதவ நடிகர் பெஞ்சமின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் போண்டாமணி அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகவும், அவருக்கு உதவ வேண்டுமென சக நடிகர் பெஞ்சமின் மணி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

1991ஆம் ஆண்டு வெளியான 'பவுனு பவுனுதான்' என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். இதனையடுத்து சில தொலைக்காட்சி தொடர்களிலும், கேம் ஷோக்களிலும் அவர் நடித்து வந்தார். சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். 2019ஆம் ஆண்டு வெளியான தனிமை படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

நடிகர் வடிவேலுவுடன் இவர் நடித்த காமெடி காட்சிகள் மிகவும் புகழ்பெற்றதாகவும், இந்த நிலையில் கடந்த மே மாதம் இருதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் போண்டாமணி அனுமதிக்கப்பட்டார் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக சக நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,: அண்ணன் போண்டா மணி அவர்களுக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழந்து விட்டது. அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். உயிருக்குப் போராடும் அவருக்கு இந்த காணொலியைப் பார்க்கும் நண்பர்கள் அவரது மேல் சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நாடுவிட்டு நாடு வந்து, இலங்கையில் இருந்து தமிழகம் வந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தற்போது நடிகராகி, திருமணம் செய்தி இரு குழந்தைகளைப் பெற்று தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அவருக்கு காப்பாற்ற வேண்டும். உங்களால் முடிந்தால் அரசியல் தலைவர்களிடமோ, நண்பர்களிடமோ சொல்லி அண்ணன் போண்டா மணியை காப்பாற்ற வேண்டும். இலங்கையிலிருந்து அனாதையாக வந்தவர். அனாதையாகவே போகக் கூடாது. தயவு செய்து உதவி பண்ணுங்க ப்ளீஷ்'என அந்த வீடியோவில் பெஞ்சமின் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story