ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு காலமானார்


ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு காலமானார்
x
தினத்தந்தி 22 May 2023 3:03 PM IST (Updated: 22 May 2023 4:35 PM IST)
t-max-icont-min-icon

ஏ.ஐ.ஜி.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானதாக குடும்பத்தினர் அறிவித்தனர்.

ஐதராபாத்

நடிகர் சரத்பாபு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஏ.ஐ.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால் இந்த செய்தியை அவரது தங்கை மறுத்தார்.

இந்த நிலையில் ஏ.ஐ.ஜி.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானதாக குடும்பத்தினர் அறிவித்தனர்.

மூத்த நடிகர் சரத்பாபு காலமானார். அவருக்கு வயது 71. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு இன்று காலமானார். சரத்பாபு ஏஐஜி மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இன்று மதியம் அவரது பல உறுப்புகள் செயலிழந்ததால் சரத்பாபு உயிரிழந்ததாக மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

நடிகர் சரத்பாபு ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர், 1951ம் ஆண்டு ஜுலை 31ல் அமதலவலசா என்ற ஊரில் பிறந்தார். இவரது நிஜப்பெயர் சத்யம் பாபு தீக்ஷித்துலு.

நல்ல உயரம், நிறம், சினிமாவிற்கு ஏற்ற முகத் தோற்றம் கொண்ட இவருக்குள் இருந்த நடிகனை அடையாளம் கண்டு, இவரை சினிமா பக்கம் திரும்பச் செய்தது இவரது கல்லூரி நண்பர்களும், பேராசிரியர்களும்.1973ல் "ராம ராஜ்யம்" என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகராக வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

பின் 1977ல் இயக்குநர் கே பாலசந்தரால் "பட்டினப்பிரவேசம்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். ஆனால் தமிழில் இவர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் இயக்குநர் கே பாலசந்தரின் "நிழல் நிஜமாகிறது". இதில் கமல்ஹாசனின் நண்பராக நடித்தார்.

தொடர்ந்து "வட்டத்துக்குள் சதுரம்", "முள்ளும் மலரும்", "அகல் விளக்கு", "நினைத்தாலே இனிக்கும்", "நெஞ்சத்தைக் கிள்ளாதே" என ஏராளமான தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தமிழில் பிசியான நடிகராக வலம் வந்தார்.

"திசை மாறிய பறவைகள்", "பொன்னகரம்", "உச்சகட்டம்", "பாலநாகம்மா", "கண்ணில் தெரியும் கதைகள்", "நதியை தேடிவந்த கடல்", "மெட்டி" போன்ற திரைப்படங்கள் இவர் நாயகனாக நடித்து தமிழில் வெளிவந்தவை.

நடிகையும், முன்னாள் முதல் அமைச்சருமான மறைந்த ஜெயலலிதா கடைஹீரோநாயகன் சரத்பாபு தான். "கீழ்வானம் சிவக்கும்", "தீர்ப்பு", "இமைகள்", "சந்திப்பு", "சிரஞ்சீவி", "எழுதாத சட்டங்கள்" என பல வெற்றிப் படங்களில் நடிகர் சிவாஜி கணேசனோடு இணைந்து நடித்து உள்ளார்.

"முள்ளும் மலரும்", "நெற்றிக்கண்", "வேலைக்காரன்", "அண்ணாமலை", "முத்து" போன்ற ரஜினியின் படங்களில் இவர் இணைந்து நடித்து உள்ளார்.

கடைசியாக தமிழில் "வசந்த முல்லை" என்ற படத்தில் நடித்தார்.

ஆந்திர மாநில சினிமா விருதான நந்தி விருதை எட்டு முறை வென்றுள்ளார். இதுதவிர "தமிழ்நாடு அரசு சினிமா விருது" என பல விருதுகளையும் வென்றுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்தவர் சரத்பாபு. தமிழில், 'நிழல் நிஜமாகிறது', 'உதிரிப்பூக்கள்', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'முள்ளும் மலரும்', 'அண்ணாமலை', 'முத்து' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

நிழல் நிஜமாகிறது, சலங்கை ஒலி, 47 நாட்கள், மெட்டி, வேலைக்காரன், அண்ணாமலை, பகல்நிலவு, சிப்பிக்குள் முத்து, சங்கர் குரு, அன்று பெய்த மழையில் என்று தமிழின் பெருமைக்குரிய அத்தனை இயக்குனர்களின் படங்களிலும் சரத்பாபு நடித்து உள்ளார்.

சரத்பாபுவின் முதல் மனைவி தெலுங்கு நடிகை ரமா பிரபா. இவரை தமிழ் ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கும். 1970 களில் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் 'சாந்தி நிலையம்' மெகா ஹிட் திரைப்படத்தில் நாகேசுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இவர்களது திருமணம் 1980 ல் நடந்தது. ஆனால் அந்தத் திருமணத்தின் ஆயுள் வெறும் 8 வருடங்களே! பிறகு இருவரும் விவாகரத்தாகி பிரிந்து விட்டனர். பிறகு சரத்பாபு நடிகர் நம்பியாரின் மகள் சினேகா நம்பியாரைத் திருமணம் செய்திருந்தார். அந்தத் திருமணமும் கடந்த 2016 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.


Next Story