கோர்ட்டில் சரண்... ஜெயப்பிரதாவுக்கு ஜாமீன்
ராம்பூர் கோர்ட்டில் நேரில் சரண் அடைந்த ஜெயப்பிரதாவின் கைது வாரண்டை ரத்து செய்து ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ள முன்னாள் கதாநாயகி ஜெயப்பிரதா அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் முன்னாள் பா.ஜனதா எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது. 2019-ம் ஆண்டு தேர்தலில் இருவேறு இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் ஜெயப்பிரதா பங்கேற்று பேசியபோது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஜெயப்பிரதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 3½ வருடமாக நடந்து வந்தது. ஒவ்வொரு முறை சம்மன் அனுப்பியும் ஜெயப்பிரதா கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்டை நீதிபதி பிறப்பித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஜெயப்பிரதா ராம்பூர் கோர்ட்டில் நேரில் சரண் அடைந்தார். இதையடுத்து கைது வாரண்டை ரத்து செய்து ஜெயப்பிரதாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.