மின்னஞ்சலில் கொலை மிரட்டல் - சல்மான் கான் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் மின்னஞ்சல் வந்ததையடுத்து அவரது வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை,
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்து அவரது நெருங்கிய கூட்டாளி ஒருவருக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இதையடுத்தது சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக சனிக்கிழமை சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது நெருங்கிய கூட்டாளியான பிரசாந்த் குஞ்சல்கர் என்பவருக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. ரோஹித் கார்க் என்பவர் இந்த மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். அந்த மின்னஞ்சலில் இந்தியில், "கோல்டி பிரார் உங்கள் முதலாளியுடன் (சல்மான் கான்) பேச விரும்புகிறார். அவர் பிஷ்னோயின் நேர்காணலைப் பார்த்திருக்க வேண்டும், இல்லையென்றால், பார்க்கச் சொல்லுங்கள்.
பிரச்சனையை முடிக்க விரும்பினால், கோல்டி பிராரிடம் பேசட்டும். நேருக்கு நேர் பேச விரும்பினால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்த முறை நாங்கள் உங்களுக்கு சரியான நேரத்தில் தெரிவித்தோம், அடுத்த முறை நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் அளித்த நேர்காணல் ஒன்றில் சல்மான் கானைக் கொல்வதே தனது வாழ்க்கையின் குறிக்கோள் என்று கூறியிருந்தார். கோல்டி பிரார் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் இருவரும் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கார்க், கோல்டி பிரார் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆகியோர் மீது கொலை மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியதாக சல்மான் கான் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாந்த்ரா போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 506(2), 120(பி) மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.