இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ராக்கெட்ரி... நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு...!
ராக்கெட்ரி படத்தை இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் பாகிஸ்தானுக்கு விஞ்ஞான ரகசியங்களை அளித்ததாக சிபிஐயால் 1994இல் கைது செய்யப்பட்டு பின்னர் 1998இல் சுப்ரீம் கோர்ட்டால் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதியும் மறைந்த விஞ்ஞானி ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் குழுவிலும் இவர் பணியாற்றியுள்ளார். அப்போது ஏவுகணையை செலுத்த திரவ எரிபொருள் தேவையை முன்கூட்டியே கண்காணித்து அதற்கான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார்.
இவரது வாழ்க்கை கதையை தழுவி ராக்கெட்ரி தம்பி எஃபெகட் என்ற பெயரில் நடிகர் மாதவன் படமாக்கினார். இந்தப் படம் மூலம் அவர் இயக்குநர் அவதாரத்தை எடுத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை சிம்ரன் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் நம்பி நாராயணனின் வரலாறை மிகத் தத்ரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன்.
இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும் என்று அந்த அறிக்கையில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.