வாடகை பாக்கி விவகாரம்: ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் யுவன் சங்கர் ராஜா


வாடகை பாக்கி விவகாரம்: ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் யுவன் சங்கர் ராஜா
x

கோப்புப்படம்

அவதூறு கருத்துகள் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக யுவன் சங்கர் ராஜா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சென்னை,

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. வாடகைப் பணம் ரூ.20 லட்சத்தை செலுத்தாமல் ஸ்டூடியோவை காலி செய்வதாக உரிமையாளர் ஹஜ்மத் பேகம் புகார் அளித்திருந்தார். மேலும் பலமுறை பணத்தை கேட்டும் தரவில்லை என்றும், போன் செய்தால் எடுப்பதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டி இருந்தார். அவர் அளித்திருந்த புகாரில், 2018 முதல் தான் வைத்திருந்த ஸ்டூடியோவிற்கு 3 ஆண்டுகளாக வாடகை தரவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வாடகை பாக்கி விவகாரத்தில் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பிரச்சினையை சட்டப்படி சந்திக்க உள்ளதாகவும், இதுபோன்ற அவதூறு கருத்துகள் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாகவும் யுவன் சங்கர் ராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story