ராமராக நடிக்கும் ரன்பீர் கபூர் - மது மற்றும் அசைவ உணவை கைவிட முடிவு...?
ராமாயணம் படத்தில் நடிக்க உள்ளதால் மது மற்றும் அசைவ சாப்பாட்டை ரன்பீர் கபூர் கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி,
ராமாயண கதையை மையமாக வைத்து ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் வந்துள்ளன. 2011 -ம் ஆண்டு தமிழ், தெலுங்கில் 'ராமராஜ்ஜியம்' என்ற பெயரில் வந்த ராமாயண படத்தில் பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதையாகவும் நடித்து இருந்தனர்.
சமீபத்தில் நடிகர் பிரபாஸ் ராமராகவும், நடிகை கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்து வெளியான படம் 'ஆதிபுருஷ்'. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த படத்திற்கு பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையிலும் வசூல் சாதனை படைத்தது.
இந்நிலையில் பாலிவுட்டில் ராமாயணம் கதையை மையமாக வைத்து மற்றொரு திரைப்படம் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மூன்று பாகங்களாக தயாராகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் நிதிஷ் திவாரி இயக்க உள்ளார். பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளோடு அதிக பொருட்செலவில் தயாராகும் இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூர் , சீதையாக சாய் பல்லவி, ராவணன் வேடத்தில் யாஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகாத நிலையில், தற்போது ராமர் வேடத்தில் நடிக்க இறைச்சி, மது போன்றவற்றை நடிகர் ரன்பீர் கபூர் கைவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தன்னை ராமர் போன்று தூய்மையாக வைத்து கொள்வதற்காக நடிகர் ரன்பீர் கபூர் உணவு பழக்கத்தை மாற்றி உள்ளதாகவும், படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை அவர் இந்த உணவு பழக்கத்தை கடைபிடிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.