ஆஸ்கர் ஸ்கிரிப்ட் நூலகத்தில் 'பார்க்கிங்' திரைக்கதை
ஆஸ்கர் ஸ்கிரிப்ட் நூலகத்தில் பார்க்கிங் படத்தின் கதையை வைக்க அழைப்பு வந்திருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஹரிஸ் கல்யாண் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் பார்க்கிங். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும் எம் எஸ் பாஸ்கர், பிரார்த்தனா நாதன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள திரைப்படம் 'பார்க்கிங்'. திரில்லர் டிராமாவான இந்த திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. சாம் சி எஸ் இதற்கு இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஈகோவால் வரும் ஒரு சிறிய பிரச்சனை ஏற்படுத்தும் விளைவுகளை இத்திரைப்படம் திரையில் காட்டியது. பார்க்கிங் திரைப்படம் 5 மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. 4 இந்திய மொழிகளிலும் ஒரு சர்வதேச மொழியிலும் இத்திரைப்படம் ரீமேக் ஆகிறது.
இந்நிலையில், ஆஸ்கர் ஸ்கிரிப்ட் நூலகத்தில் பார்க்கிங் படத்தின் திரைக்கதையை வைக்க அழைப்பு வந்திருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவில் மிகப்பெரிய படைப்புகளுக்கு மத்தியில் எனது படைப்பும் இடம்பெறுவது, பெருமையாக உள்ளதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இது தமிழ் படத்திற்கு கிடைத்த கௌரவம் என்று, ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஹரிஷ் கல்யாண் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது ''பார்க்கிங் படம் உங்கள் இதயங்களிலிருந்து ஆஸ்கார் நூலகம் வரை. ஒரு நல்ல கதை அதற்கான இடத்தை தானே தேடி போகும்.இந்த நம்பமுடியாத பயணத்திற்கும் என் பார்க்கிங் அணிக்கு நன்றி" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.